×

தூய்மை இந்தியா கணக்கெடுப்பு பணி மாநகராட்சியில் 11 ஆயிரம் பேரிடம் கருத்து கேட்பு

நாமக்கல், மே 7: தூய்மை இந்தியா கணக்கெடுப்பு பணியை, ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. நகரங்களின் தூய்மை நிலையை மதிப்பீடு செய்ய, இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நாமக்கல் மாநகராட்சி, தூய்மை இந்தியா கணக்கெடுப்பு பணியில், தமிழக அளவில் முதலிடம் பிடித்தது. நடப்பாண்டு தூய்மை இந்தியா கணக்கெடுப்பு பணிக்கான, முதற்கட்டமாக பொதுமக்களிடம் கருத்துகேட்பு நாமக்கல் மாநகராட்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநகராட்சி தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், நாமக்கல் மாநகராட்சியில் உள்ள பொதுமக்களிடம், நகரின் தூய்மைகள் குறித்து கருத்து கேட்டு அதனை ஒன்றிய அரசின் இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், தனியார் கல்லூரிகள் மற்றும் வீடு, வீடாக சென்றும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.இது குறித்து மாநகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி கூறுகையில், `நாமக்கல் மாநகராட்சியில் இதுவரை 11 ஆயிரத்து 18 பேரிடம், தூய்மை இந்தியா கணக்கெடுப்பு தொடர்பான கருத்துகள் பெறப்பட்டு, அது ஒன்றிய அரசின் போர்டலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு அடுத்த படியாக, நாமக்கல் மாநகராட்சியில் அதிக எண்ணிக்கையில் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இந்த பணி இம்மாதம் இறுதி வரை தொடர்ந்து நடைபெறும். கடந்த ஆண்டு தமிழகம் அளவில், நாமக்கல் மாநகராட்சி தூய்மை நகரங்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது. நடப்பாண்டு, அதே நிலையை அடைய தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என்றார்.

Tags : Swachh Bharat ,Namakkal ,Union Ministry of Housing and Urban Affairs ,Survey ,Namakkal Corporation ,Swachh Bharat… ,
× RELATED டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர் பலி