×

தொடர்ந்து 10 ஆண்டுகள் பதவியில் இருந்து சாதனை; பினராயி விஜயனின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

 

திருவனந்தபுரம்: கேரளாவில் தொடர்ந்து 10 வருடங்கள் ஆட்சியில் இருந்து சாதனை படைத்த பினராயி விஜயன் மற்றும் இடதுசாரி கூட்டணியின் படுவீழ்ச்சி கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்தில் கடந்த 2021ம் ஆண்டு வரை தொடர்ந்து 2 முறை எந்தக் கட்சியும் ஆட்சியில் இருந்ததில்லை என்ற ஒரு நிலை இருந்தது. தொடர்ந்து 10 வருடங்கள் யாரும் முதல்வராக இருந்ததில்லை என்ற நிலையும் கேரளத்தில் இருந்தது.
கேரளத்தின் இந்த நிலையை மாற்றிக் காட்டியவர் என்ற பெருமை பினராயி விஜயனுக்கு உண்டு. கடந்த 2016ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியிடமிருந்து வெற்றியை பறித்து பினராயி விஜயன் முதல்வரானார். அப்போது வி.எஸ். அச்சுதானந்தன் தான் முதல்வர் ஆவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் கட்சி மேலிடம் பினராயி விஜயனுக்குத் தான் முதல்வர் பதவியை வழங்கியது. வழக்கமாக கேரளாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாறுவது தான் காட்சியாக இருந்து வந்தது. இதேபோலத்தான் 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நமக்குத்தான் அடுத்த ஆட்சி என்று காங்கிரஸ் கூட்டணியினரும் கருதியிருந்தனர். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் இடதுசாரி கூட்டணி மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 இடங்களில் வெற்றி பெற்று பெரும் பலத்துடன் மீண்டும் ஆட்சியமைத்தது. பினராயி விஜயன் மீண்டும் முதல்வரானார். இப்படி தொடர்ந்து 10 ஆண்டுகள் முதல்வராக இருந்து இவர் கேரளாவில் ஒரு புதிய வரலாறை படைத்தார். இந்த சாதனை மேலும் தொடரும் என்றும், கேரளத்தில் பினராயி விஜயனின் 3.0 அரசு அமையும் என்றும் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு வரை கம்யூனிஸ்ட் கட்சியினர் உறுதியுடன் கூறிவந்தனர். தேர்தல் முடிவு வெளியானதற்கு அடுத்த நாள் பதவிப்பிரமாண நிகழ்ச்சி நடத்துவதற்கு பந்தல் போடக்கூட பினராயி விஜயன் உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகின. அதே நாளில் அமைச்சரவை கூட்டம் நடத்துவதற்கு கூட பினராயி விஜயன் திட்டமிட்டிருந்தாராம். மேலும் தேர்தல் முடிவு வெளிவந்த 4ம் தேதி காலை 9 மணிக்கு தன்னுடைய சொந்தத் தொகுதியான தர்மடத்தில் வைத்து பத்திரிகையாளர்களை சந்திக்கவும் இவர் தீர்மானித்திருந்தார்.

ஆனால் நிலைமை தலைகீழாகி கடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்த தொகுதிகளை விட இடதுசாரி கூட்டணியால் மிகவும் குறைந்த இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு 41 தொகுதிகள் கிடைத்தன. ஆனால் இம்முறை இடதுசாரி கூட்டணிக்கு அதைவிட குறைவாக 35 தொகுதிகளில் மட்டுமே வெற்றியை தக்க வைக்க முடிந்தது. இம்முறை 100 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றுவோம் என்று கூறிவந்த கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு இந்த முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தலுக்கு முன்பே இம்முறையும் பினராயி விஜயன் தான் முதல்வர் என்று இடதுசாரி கூட்டணி அவரை முன்னிலைப்படுத்தியது. இதுதான் தோல்விக்கு காரணமாக இருந்திருக்குமோ என்று இப்போது கம்யூனிஸ்ட் கட்சியினர் எண்ணுகின்றனர். பொதுவாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் மக்களுடன் நெருக்கமாக இருப்பார்கள். கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் முதல்வரான இ.எம்.எஸ். நம்பூதிரிப்பாடில் தொடங்கி நாயனார், அச்சுதானந்தன் வரை பொதுமக்களிடம் இறங்கிச் சென்று அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி இருந்தனர். ஆனால் பினராயி விஜயன் சாதாரண மக்களிடம் இருந்து விலகியே இருந்தார். பொது மேடைகளிலும், நிகழ்ச்சிகளிலும் மக்களை தன்னிடம் நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டார். யாராவது செல்பி எடுக்க வந்தால் கூட அதை அனுமதிப்பது கிடையாது.

நிகழ்ச்சிகளில் இவருக்கு முன்பாக யாராவது கூடுதல் நேரம் பேசினாலோ, நிகழ்ச்சி அறிவிப்பாளர் புகழ்ந்து பேசினாலோ மேடையிலேயே அவர்களை வெளிப்படையாக கண்டிப்பது இவரது வழக்கமாக இருந்தது. இது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பினராயி விஜயன் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு தொண்டர் தனக்கு ஒரு சந்தேகம் இருப்பதாக கூறினார். அப்போது கோபமடைந்த பினராயி விஜயன், ‘அதை உன்னுடைய வீட்டில் போய் கேளு’ என்று கோபமாக கூறியது அந்தக் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.கேரளாவில் இதற்கு முன்பு எந்த முதல்வர்களுக்கும் தேவையில்லாமல் அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டது கிடையாது. அச்சுதானந்தன், உம்மன்சாண்டியின் காலம் வரை முதல்வரின் வாகனத்திற்கு முன்னால் ஒரே ஒரு போலீஸ் பாதுகாப்பு வாகனம் மட்டுமே சென்றது.ஆனால் பினராயி விஜயனின் வாகனத்திற்கு முன்னும், பின்னும் வாகனங்கள் அணிவகுத்து சென்றது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அது மட்டுமில்லாமல் பொது நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு அதிகாரிகளின் கெடுபிடி சாதாரண மக்களை முகம் சுளிக்க வைத்தது.

இது தவிர தங்களது கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தியவர்களை வருடக்கணக்கில் கண்டுகொள்ளாமல் இருந்ததும் பினராயி விஜயனின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. சம்பள உயர்வு கோரி சுகாதாரப் பணியாளர்களான ஆஷா தொழிலாளர்கள் திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன் 1 வருடத்திற்கு மேல் போராட்டம் நடத்தினர். ஆனால் அவர்களது கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் ஆஷா தொழிலாளர்கள் மாநிலம் முழுவதும் சென்று இடதுசாரி கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக பிரசாரம் செய்தனர்.
அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்று ரேங்க் பட்டியலில் இடம்பிடித்தும் வேலை கிடைக்காத நூற்றுக்கணக்கானோர் பல மாதங்களாக தலைமைச் செயலகம் முன் போராட்டம் நடத்தினர். அவர்களது கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. ரேங்க் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு வேலை கிடைக்காத நிலையில் கட்சிக்காரர்களுக்கு மட்டும் வேலை கொடுப்பதாக தகவல் வெளியானதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தவிர சுகாதாரம், பொதுப்பணித்துறை உள்பட அனைத்து அரசுத் துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டதாக எதிர்க்கட்சியினர் புகார் கூறினர். பினராயி விஜயன் தன்னுடைய மருமகனான முகம்மது ரியாசை அடுத்த முதல்வராக கொண்டுவர திட்டமிடுகிறார் என்ற தகவலும் கேரளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.இது தவிர மகள் வீணா விஜயன் மீது கூறப்பட்ட ஊழல் புகார்களும் பினராயி விஜயனுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது. இத்தகைய காரணங்கள் தான் பினராயி விஜயனுக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தியது என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். கேரளத்தில் பினராயி விஜயனின் அரசு தோல்வியடைந்ததை தொடர்ந்து 1977க்குப் பின்னர் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கம்யூனிஸ்ட் அரசு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

 

Tags : Pinarayi Vijayan ,Thiruvananthapuram ,Left alliance ,Kerala ,
× RELATED தமிழகத்​தை சேர்ந்த 5 பேர் உட்பட 13 பேர்...