மீனம்பாக்கம்: சார்ஜாவில் இருந்து இன்று அதிகாலை 3.25 மணியளவில் 217 பயணிகளுடன் ஏர்அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம், சென்னை விமானநிலைய பன்னாட்டு முனைய ஓடுபாதையில் வந்திறங்கியது. அப்போது அந்த விமானத்தில் இருந்த புதுக்கோட்டையை சேர்ந்த முகமது நிஜாமுதீன் செரீப் (30) என்ற பயணி, திடீரென விமானத்தின் ‘எமர்ஜென்சி எக்சிட்’ எனும் அவசரக்கால கதவை திறந்து, விமானத்தில் இருந்து கீழே குதித்து, அதன் சரக்கு பாதை வழியாக ஓடினார்.
இதைத் தொடர்ந்து, சென்னை விமானநிலைய ஓடுபாதை பகுதியில் அவசரகால அபாய அறிவிப்பு எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து தப்பியோடிய புதுக்கோட்டை பயணி முகமது நிஜாமுதீன் செரீப்பை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள், விமானநிலைய உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் வந்து விசாரித்தனர். முகமது நிஜாமுதீன் செரீப்பை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். இதில் அந்த பயணி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரிகிறது. அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா இல்லையெனில், தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவரா என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கீழே குதித்ததில் காயம் அடைந்த செரீப்புக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விமானங்கள் தாமதம்
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று அதிகாலை 4 மணியளவில் ஷார்ஜாவுக்கு செல்லவேண்டும். ஆனால் சம்பவம் காரணமாக அந்த விமானம் தாமதமாக இன்று காலை 7.45 மணியளவில் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்குத் திருப்பி அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், பின்னர் பெங்களூரில் இருந்து சென்னைக்குத் திரும்பி, இன்று அதிகாலை 5.35 மணியளவில் லண்டனுக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். ஆனால், அந்த விமானம் இன்று காலை 9 மணியளவில் லண்டனுக்குப் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
