×

பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பம் இன்று முதல் ஆன்லைனில் பதிவு: மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பு துவக்கம்

சென்னை: தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கி ஜூன் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் தமிழகத்தில் நடந்த பொறியியல் மாணவர் சேர்க்கை கவுன்சலிங்கில் மொத்தம் 443 கல்லூரிகள் பங்கேற்றன. இந்த கல்லூரிகளில் மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 585 இடங்கள் இருந்த நிலையில், அதில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 841 மாணவ மாணவியர் சேர்ந்து கல்வி பயின்றனர். இந்த புள்ளி விபரங்களின் அடிப்படையில் நடப்பு 2024ம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் சேர்க்கை பணிகளை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தற்போது தொடங்கியுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகள், அதன் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பிஇ மற்றும் பிடெக் இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று (மே 3) தொடங்கி ஜூன் 2ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவுக் கட்டணமாக ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி மற்றும் டிஎன்சி பிரிவினருக்கு 500 ரூபாயும், எஸ்சி, எஸ்சிஏ மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 250 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இணையதள வசதி இல்லாத மாணவர்கள் பயன்பெறும் வகையில் 110 பொறியியல் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சந்தேகங்களுக்கு 1800-425-0110 என்ற எண்ணையோ அல்லது மின்னஞ்சலையோ தொடர்பு கொள்ளலாம்.

ஜூன் 2ம் தேதி விண்ணப்பம் முடிந்ததும், ஜூன் 6ம் தேதி அசல் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்படும். ஜூன் 8ம் தேதி முதல் 20ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். தொடர்ந்து ஜூன் 29ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, ஜூன் 30ம் தேதி முதல் ஜூலை 4ம் தேதி வரை குறைகள் தீர்க்கப்படும். ‘இதற்கான கவுன்சலிங் தேதி மற்றும் இதர விபரங்கள் ஏஐசிடிஇ அனுமதி கிடைத்த பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும்’ என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Tags : Chennai ,PE ,BITEC ,Tamil Nadu ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயிலால் மரக்காணத்தில் உப்பு உற்பத்தி அமோகம்