கோவில்பட்டி: எம்ஜிஆருக்கு பின்னர் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. விஜய்யின் நிலை நாளை தெரியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். கோவில்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான கடம்பூர் ராஜூ நேற்று அளித்த பேட்டி: எஸ்ஐஆர் காரணமாகத்தான் அதிகமான வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களை பெற வாய்ப்பு இருக்கிறது. அதிமுக தனியாக 140 முதல் 170 இடங்களை வெற்றி பெறும் என எதிர்பார்க்கிறோம். விஜய்யின் தவெக நிலை குறித்து நாளை வாக்கு எண்ணும் போது தெரியும். எம்ஜிஆர் கட்சி தொடங்கியதும் ஆட்சியை பிடித்தார் என்றால் அவருடைய அரசியல் பாரம்பரியம் என்பது வேறு. நடிகர் விஜய் இதுவரை என்ன நல்ல கருத்துக்களை திரைப்படத்தில் மக்களுக்கு சொல்லி இருக்கிறார்?.
இன்றைக்கும் எம்ஜிஆர் படங்களில் உள்ள பாடல்கள் மற்றும் வசனங்கள் அடுத்த தலைமுறையினரை நல்வழிப்படுத்துகின்ற நிலையில் தான் இருக்கும். எம்ஜிஆருக்கு பின்னர் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. 52 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் யார் கட்சி ஆரம்பித்தாலும் அதிமுக வாக்கு வங்கியை பாதித்ததாக சரித்திரம் இல்லை. அந்த சரித்திரம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
