×

மதுரை சித்திரை திருவிழாவில் மண்டூக முனிவருக்கு அழகர் சாப விமோசனம்: விடிய, விடிய தசாவதாரம்

மதுரை: சித்திரை திருவிழாவில் மண்டூக முனிவருக்கு அழகர் சாபவிமோசனம் அளிக்கும் முக்கிய நிகழ்ச்சி நேற்று நடந்தது. தொடர்ந்து விடிய, விடிய ஆழ்வார்புரம் ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடந்தது. சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் இருந்து அழகர், கடந்த ஏப். 29ம் தேதி தங்கப்பல்லக்கில் மதுரை புறப்பட்டு வந்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான அழகர், வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று முன்தினம் நடந்தது.

இதையடுத்து நேற்று காலை வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் அழகருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு பின் சைத்திரயோபசாரம் நடந்தது. பின்னர் ஏகாந்த சேவையில் அழகர், வீரராகவ பெருமாள் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் சேஷ வாகனத்தில் சுந்தரராஜப் பெருமாள் திருக்கோலத்தில் காலை 10.30 மணிக்கு புறப்பாடாகிய அழகர், வண்டியூர் பகுதியில் வைகையாற்றின் மையத்தில் உள்ள தேனூர் மண்டகப்படியில் எழுந்தருளினார்.

ஆண்டுதோறும் மண்டகப்படியின் கீழ் பகுதியிலேயே சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடக்கும். இந்தாண்டு தேனூர் மண்டபம் உள்பகுதியில் அழகர் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வை எடுத்துரைக்கும் வகையில், தேனூர் மண்டகப்படி முன்பாக திருக்குளம் போன்று வடிவமைக்கப்பட்டு நீர் நீரப்பப்பட்டு பூக்கள் மற்றும் மண்டூக முனிவரின் சிலை வைக்கப்பட்டு, நாரை ஒன்று கட்டி வைக்கப்பட்டிருந்தது.

சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கருட வாகனத்தில் எழுந்தருளிய அழகர், நாரைக்கு முக்தி அளித்தார். இதனையடுத்து நாரை பறக்க விடப்பட்டது. பின்னர் மண்டூக முனிவரின் சிலைக்கு நம்மாழ்வார் திருமொழி பாடல் பாடப்பட்டு சாப விமோசனம் வழங்கும் பூஜை நடத்தப்பட்டது. இதைதொடர்ந்து, அழகர் அங்கிருந்து புறப்பட்டபோது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சர்க்கரை தீபம் ஏந்தி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று மதியம் 3.30 மணிக்கு அனுமார் கோயிலில் அழகர் எழுந்தருளினார். அங்கு அங்கப்பிரதட்சணம் நடைபெற்றது.

பின் மேளதாளம் முழங்க மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள ராமராயர் மண்டபத்துக்கு கிளம்பினார். அங்கு நேற்றிரவு 10 மணியளவில் முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகினி அவதாரம் உள்ளிட்ட தசாவதாரங்களில் அழகர் பக்தர்களுக்கு விடிய விடிய காட்சி தந்தார். இன்று காலை 6 மணிக்கு மோகினி அவதாரத்தில் வீதியுலா வரும் அழகர், பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் ராஜாங்க கோலத்தில் எழுந்தருளுகிறார்.

நாளை அதிகாலை 2.30 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி, கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். அதே திருக்கோலத்தில் கருப்பணசாமி கோயில் சன்னதியில் வையாழி ஆனவுடன் அங்கிருந்து அழகர் மலைக்கு புறப்படுகிறார். மே 5ம் தேதி அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக காலை 10.40 மணிக்கு மேல் 11.10 மணி இருப்பிடம் சென்றடைகிறார். மே 6ம் தேதி உற்சவ சாந்தியுடன் அழகர்கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

Tags : Madurai Chithirai Festival ,Azhagar ,Manduka Muni ,Videya ,Videya Dashavatharam ,Madurai ,Chithirai Festival ,Ramarayar Mandapam ,Azhwarpuram ,Azhagar Temple ,
× RELATED இறக்குமதி பருத்திக்கு வரி விதிப்பு...