திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த மேலப்பாண்டி பகுதியில் தங்கி இருக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த நாசர் (45) என்பவருக்கு சொந்தமான மினி லாரியில் முத்துப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மூலிகைகளை பறிப்பதற்காக மேலப்பாண்டி பகுதியை சேர்ந்த வேணி(40), சுமதி(55), அஜித்தா(55), அவரிக்காடு பகுதியை சேர்ந்த பரிமளா(40) மேலும் 3 ஆண்கள் ஒரு சிறுவன் உள்ளிட்ட எட்டு பேர் சென்றுள்ளனர்.
அப்போது மினி லாரி திருத்துறைப்பூண்டி – முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது பின்னத்தூர் என்கிற பகுதியில் உள்ள சாலை வளைவில் மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த வயலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் வாகனத்தில் இருந்த சிறுவன் உட்பட எட்டு கூலித்தொழிலாளர்களும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து வரவளைத்து ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து அங்கு அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து அங்கு சென்ற எடையூர் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி தொகுதி எம்எல்ஏ மாரிமுத்து திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கூலித்தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் மேலும் அங்கு பணியில் இருந்த மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து விபரங்களை கேட்டறிந்தார்.
