×

தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் அழகர்: ‘கோவிந்தா… கோவிந்தா…’ கோஷம் விண்ணை பிளக்க பல லட்சம் பக்தர்கள் தரிசனம்

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் நேற்று தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் அழகர் இறங்கினார். ‘கோவிந்தா… கோவிந்தா…’ கோஷம் விண்ணை பிளக்க பல லட்சம் பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர். மதுரை சித்திரை திருவிழா கடந்த 19ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 28ம் தேதி மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், 29ம் தேதி தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து வைகை ஆற்றில் அழகர் இறங்கும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது.

முன்னதாக அழகர்கோயிலில் இருந்து அழகர், கள்ளழகர் வேடம் பூண்டு, கடந்த ஏப்.29ம் தேதி தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் ஆகிய இடங்களை கடந்து நேற்று முன்தினம் காலை மூன்றுமாவடி வந்தார். அங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அவரை எதிர்கொண்டு அழைத்து வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. தொடர்ந்து புதூர், ரேஸ்கோர்ஸ் காலனி, ரிசர்வ் லைன், தல்லாகுளம் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் அழகராக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். அங்கு இரவு 11.30 மணியளவில் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

அப்போது, விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அழகருக்கு அணிவிக்கப்பட்டது. நேற்று அதிகாலை 2.30 மணிக்கு மேல் அழகர், தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அவருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அதிகாலை 3 மணி அளவில் தங்கக்குதிரையில் அமர்ந்தபடி, ஆயிரம் பொன் சப்பரத்தில் வைகை ஆற்றுக்கு அழகர் புறப்பட்டார். அழகர் ஆற்றில் இறங்குவதையொட்டி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்ததால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தல்லாகுளத்தில் இருந்து பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி ஆழ்வார்புரம் பகுதிக்கு அழகர் வந்தார். அதிகாலை 4.08 மணிக்கு வீரராகவ பெருமாள் வைகை ஆற்றுக்கு வந்து மண்டகப்படியில் காத்திருந்தார். அவர், தங்கக்குதிரையில் வந்த அழகரை வரவேற்று 3 முறை வலம் வந்தார். வைகை ஆற்றில் அழகர் இறங்குவதைக் காண ஆற்றின் அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் வெள்ளமென கூடி இருந்தனர். வைகை ஆற்றின் கரையோரம், ஆற்றுப்பாலம் என திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்களின் தலைகளே தென்பட்டன. வளமையும், செழுமையும் நிலைக்க தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் பச்சைப்பட்டு உடுத்தி, வைகை ஆற்றில் அதிகாலை 5.48 மணிக்கு இறங்கினார்.

அப்போது அங்கு கூடி இருந்த சுமார் பல லட்சம் பக்தர்கள் ‘கோவிந்தா… கோவிந்தா…’ என்று எழுப்பிய கோஷம் விண்ணை முட்டியது. பக்தர்கள் சர்க்கரை நிரப்பிய செம்புகளில் தீபம் ஏற்றி அழகருக்கு தீபாராதனை காட்டி வழிபட்டனர். வைகை ஆற்றில் இறங்கிய அழகர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அங்கிருந்து காலை 7.25 மணிக்கு புறப்பட்டு ராமராயர் மண்டபம் வந்தார். பகல் 12 மணி அளவில் ராமராயர் மண்டபத்தில் கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அழகரை குளிர்விக்கும் தீர்த்தவாரி நடைபெற்றது. இரவு 9 மணி அளவில் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் அழகர் எழுந்தருளினார்.

அழகர் இறங்கும் வைகையாற்று பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வைகையாற்றுக்குள் செல்ல ஐந்தடுக்கு பாதுகாப்பு இருக்கும் இடம் வரையிலும் ஏற்படுத்தப்பட்ட தனிப்பாதை வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் நெரிசலின்றி பக்தர்கள் சென்று வர முடிந்தது. அழகர் வைகை ஆற்றில் இறங்கிய வைபவத்தையொட்டி போலீஸ் கமிஷனர் அபிஷேக் தீக்‌ஷித் தலைமையில், 10 எஸ்பிக்கள் மற்றும் 3,500 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் அமைச்சர் பி.மூர்த்தி, சு.வெங்கடேசன் எம்பி, கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன், தீயணைப்புத்துறை அதிகாரிகள் மற்றும் நிலைய அதிகாரிகள், அழகர்கோவில் தக்கார் வெங்கடாச்சலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மத நல்லிணக்க நீர்மோர் பந்தல்: வைகை ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்தை காண மதுரையை லட்சக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டிருந்தனர். எங்கு நோக்கினும் நீர்மோர் பந்தல், அன்னதானம் உள்ளிட்டவைகளால் நகரமே களை கட்டியது. மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் மதுரை கீழவாசல் புனித மரியன்னை பேராலயம் முன்பு கிறிஸ்தவ பேராயர்கள், இஸ்லாமிய மதகுருக்கள், சமய நல்லிணக்க ஆர்வலர்கள் என பலரும் இணைந்து நீர்மோர், பொங்கல் உள்ளிட்டவைகள் வழங்கினர். தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பில், மத நல்லிணக்க நீர்மோர் பந்தல் அமைத்து அனைத்து பக்தர்களுக்கும் விநியோகித்தது நெகிழ்வை ஏற்படுத்தியது.

சமூக ஒற்றுமையின் சங்கமமாக அமைந்த இந்நிகழ்வில் கிறிஸ்தவத் திருச்சபை சார்பில் பேராயர்கள் ஹென்றி ஜெரோம், பால் பிரிட்டோ, பெனடிக் பரம பாஸ், இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் ஐக்கிய ஜமாத் செயலாளர் ஆம்புலன்ஸ் சேக், முஹம்மது பாரூக் மற்றும் பள்ளி ஜமாத் தலைவர் ஜலில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்களுடன், மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன், மதுரை மாநகராட்சி பொறுப்பு மேயர் நாகராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதுகுறித்து பேராயர்கள், மதகுருக்கள் கூறும்போது, ‘‘இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என அனைத்தும் அன்பையே போதிக்கிறது. ஒற்றுமையோடு இதுபோன்ற திருவிழாக்களில் இணைந்து நாம் அன்பு பாராட்டுவது நம் வலிமையை, சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும்’’ என்றனர். கிறிஸ்தவ பேராயர்களுடன், இஸ்லாமிய மதகுருகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கிய நிகழ்வு மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

* மண்டூக முனிவருக்கு இன்று சாப விமோசனம்
இன்று (மே 2) காலை 6 மணிக்கு மதுரை வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில், அழகர் திருமஞ்சனமாகி ஏகாந்த சேவையில் உலா வருகிறார். காலை 9 மணிக்கு சேஷ வாகனத்தில், 11.30 மணிக்கு தேனூர் மண்டபத்தை அடைகிறார். பிற்பகல் 3 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். பிற்பகல் 3.30 மணிக்கு அனுமார் கோயிலுக்கு அழகர் வருகிறார். அங்கு அங்கப்பிரதட்சணம் நடக்கிறது. இரவு ராமராயர் மண்டபத்திற்கு வருகிறார். அங்கு 10 மணிக்கு திருமஞ்சனமாகி விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது.

நாளை (மே 3) காலை 6 மணிக்கு மோகனாவதாரத்தில் வீதி உலா வருகிறார். பகல் 2 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளுகிறார். 4ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு மதுரை தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி பூப்பல்லக்கில் எழுந்தருளுகிறார். அதே திருக்கோலத்தில் கருப்பணசாமி கோயிலில் இருந்து அழகர் மலைக்கு புறப்படுகிறார். மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக 5ம் தேதி காலை 10.40 மணிக்கு மேல் 11.10 மணிக்குள் இருப்பிடம் அடைகிறார். 6ம் தேதி உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

Tags : Vaigai River ,Madurai ,Madurai Chithirai festival ,
× RELATED மனைவிக்கு 3 பேருடன் கள்ளத்தொடர்பு...