×

அமெரிக்க வரி விதிப்பு, ஈரான்-இஸ்ரேல் போர் நடந்தபோதும் 1.74 லட்சம் டன் மஞ்சள் ஏற்றுமதி: 5% கூடுதல் வர்த்தகத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு: அமெரிக்க வரி விதிப்பு, ஈரான்-இஸ்ரேல் போர் நடந்தபோதும் இந்தியாவில் இருந்து கடந்த ஆண்டில் வெளிநாடுகளுக்கு 1.74 லட்சம் டன் மஞ்சள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 5 சதவீதம் அதிகரித்துள்ளதால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் மஞ்சள் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் தனித்துவம் பெற்று விளங்குகிறது. இதனால், ‘மஞ்சள் நகரம்’ என அழைக்கப்படும் ஈரோடு மஞ்சளுக்கு எப்போதும் உயர் மதிப்பு உள்ளது.

இதில், ஈரோடு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மஞ்சள், பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையம், செம்மாம்பாளையம் ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலமாகவும், ஈரோடு மற்றும் கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலமாகவும் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏலத்தில் வெளி மாவட்டம், வெளி மாநில வியாபாரிகள் நேரடியாக வந்தும் மஞ்சளை கொள்முதல் செய்து செல்கின்றனர். இதுதவிர, வெளி மாநிலங்களுக்கும் மஞ்சள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தபடியாக கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களிலும் அதிக அளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்திய மஞ்சள் மக்களின் உணவுகளிலும், நறுமணப் பொருளாகவும், நிறமியாகவும், பல்வேறு மருத்துவ பயன்பாடுகளும் நிறைந்துள்ளதால் வெளிநாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2025-2026ம் நிதியாண்டில் இந்தியாவில் இருந்து மஞ்சள் ஏற்றுமதி கூடுதலாக 5 சதவீதம் வரை அதிகரித்துள்ளதால், விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது: தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் நிலவும் சாதகமான காலநிலை, மண் வளம், மற்றும் தொழிலாளர்கள் காரணமாக உலக அளவில் 80 சதவீத மஞ்சள் இந்தியாவில் உற்பத்தியாகிறது.

இதில், உலக அளவிலான மஞ்சள் வர்த்தகத்தில் 60 சதவீதம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவில் ஈரோடு, சேலம், அலப்பி, நிஜாமாபாத், சாங்லி, ராஜாபுரி, நாம்தேட், பஸ்மத், ஹிங்கோலி ஆகிய பகுதிகளில் பிரசித்தி பெற்ற மஞ்சள் ரகங்கள், மாறுபட்ட வண்ணங்கள் மற்றும் நறுமணத்துடன் விளைவிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் அதிக அளவில் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. நம் நாட்டில் விளைவிக்கப்படும் மஞ்சளில் 3 முதல் 5 சதவீதம் வரை ‘குர்குமின்’ எனும் வேதிப்பொருள் இருப்பதால் அதன் தரத்தின் காரணமாக உலக நாடுகளில் இந்திய மஞ்சளை விரும்பி வாங்குகின்றனர். மேலும், மற்ற நாடுகளின் விலையைவிட குறைவான விலையில் இந்திய மஞ்சள் ஏற்றுமதி செய்யப்படுவதும் நமக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி வருகிறது.

அதனை கருத்தில் கொண்டு, வெளிநாடுகளின் தேவைக்கு தகுந்தவாறு ரசாயனங்களின் கலப்பின்றி இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்படும் உயர்தர மஞ்சள், நம் நாட்டில் ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிக்க செய்து வருகிறது.
குறிப்பாக வங்கதேசம், அமெரிக்கா, மலேசியா மற்றும் வளைகுடா நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளுக்கும் நமது மஞ்சள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த, 2023ம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி 1.45 லட்சம் மெட்ரிக் டன் மஞ்சள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு 15 சதவீதம் அதிகரித்து 1.66 லட்சம் மெட்ரிக் டன் மஞ்சள் ஏற்றுமதியாகியுள்ளது. கடந்த 2025-2026 நிதியாண்டில் கூடுதலாக 5 சதவீதம் உயர்ந்து 1.74 லட்சம் மெட்ரிக் டன் மஞ்சள் ஏற்றுமதி ஆகியுள்ளது. அமெரிக்க வரி விதிப்பு, ஈரான் நாட்டுடனான போர் சூழல் இருந்தபோதும் 5 சதவீதம் கூடுதலாக ஏற்றுமதி ஆகியிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : US ,Iran ,-Israel ,Erode ,India ,Erode… ,
× RELATED மனைவிக்கு 3 பேருடன் கள்ளத்தொடர்பு...