* ஈரான் நிச்சயம் ஆடும் ஃபிபா தலைவர் உறுதி
நியூயார்க்: உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இந்தாண்டு அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளில் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க ஈரான் உட்பட 48 நாடுகள் தகுதி பெற்றுள்ளன. தற்போது அமெரிக்கா – ஈரான் இடையே போர் நடந்து, இறுக்கமான சூழல் காணப்படுவதால் ஈரான், உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் ஆடுவது கேள்விக்குறியானது. இந்நிலையில், சர்வதேச கால்பந்து அமைப்பான ஃபிபாவின் தலைவர் கியானி இன்பேன்டினோ கூறுகையில், ‘உலகக் கோப்பை போட்டிகளில் ஆட ஈரான் தகுதி பெற்றுள்ளது. எனவே, போட்டிகளில் அந்நாட்டின் அணி நிச்சயம் பங்கேற்கும்’ என்றார்.
* தம்பியை உற்சாகப்படுத்திய கார்லோஸ் அல்காரஸ்
டென்னிஸ் உலகின் முதல் நிலை வீரராக திகழும் ஸ்பெயின் நாட்டின் கார்லோஸ் அல்காரஸ் (22), வலது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், கார்லோசின் 14 வயது இளம் சகோதரர் ஜெய்மே, மெக்சிகோ சிட்டியில் நடந்த, 16 வயதுக்கு உட்பட்டோருக்கான டென்னிஸ் போட்டியில் பங்கேற்றார். அதில் ஜெய்மே அபார வெற்றி பெற்றார். அப்போட்டியை, பார்வையாளர் அரங்கில் அமர்ந்து கார்லோஸ் அல்காரஸ் கண்டு களித்தார். தனது சகோதரர் ஜெய்மே சிறப்பான ஷாட்களை அடித்தபோதெல்லாம் அல்காரஸ் கைதட்டி உற்சாகப்படுத்தினார்.
* கனடா கிரிக்கெட் அணி பயிற்சியாளர் மான்டி தேசாய்
டொரன்டோ: கனடா நாட்டின் ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மான்டி தேசாயை, கிரிக்கெட் கனடா நியமித்துள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளில் கனடா கிரிக்கெட் அணி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், மான்டி தேசாயின் நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தியாவை சேர்ந்த மான்டி தேசாய், கடந்த 2008 – 15 ஆண்டுகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார். கடந்த 2018 – 19 ஆண்டுகளில், ஆந்திரா ரஞ்சி கோப்பை அணியின் தலைமை பயிற்சியாளராக அவர் பணியாற்றி உள்ளார்.
