சென்னை: படத்தின் லாப, நஷ்டத்தில் பங்கேற்க மறுப்பு தெரிவித்து வரும் தமிழ் நடிகர்களை கண்டித்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்கின்றனர். இதுகுறித்து சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பிறகு சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து தென்னிந்திய நடிகர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டு, சுமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்காமலேயே தயாரிப்பாளர்கள் சங்கம் தன்னிச்சையாக முடிவெடுப்பதா என்று கண்டனம் தெரிவித்தது.
மேலும், தங்களிடம் ஆலோசனை நடத்தாமல் அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்றுக்கொள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் மறுத்துவிட்டது. எனவே, ஏற்கனவே அறிவித்தபடி இன்று வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது. ‘மீடியம் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கும் நடிகர்கள், இனிவரும் காலங்களில் வருவாய் பகிர்வு முறையில் நடிக்க வேண்டும்’ என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தயாரிப்பாளர்களின் லாப, நஷ்டங்களில் நடிகர்கள் பங்கேற்க வேண்டும் என்று, கடந்த 3 வருடங்களாக தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நேரிலும், கடிதத்திலும், பத்திரிகைகளிலும் பலமுறை தெரிவித்ததாகவும், நடிகர் சங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
எனவே, தயாரிப்பாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும் என்று தெரிந்தும், பிற்கால பாதிப்புகளை முன்பே தடுத்து நிறுத்தும் நோக்கத்தில், அனைத்து தயாரிப்பாளர்களின் ஒப்புதலுடன் இன்று வேலைநிறுத்தம் செய்ய முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாக, தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ள ஒத்துழைப்பு தர, ‘பெப்சி’ என்ற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் முன்வந்துள்ளது. தயாரிப்பாளர்களின் இந்த திடீர் முடிவு, தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
