×

அருளால் ஆட்கொள்ளும் கள்ளழகர்!

கள்ளழகர் வைகையாற்றில் எமுந்தருளல் – 1.5.2026

தமிழகத்திற்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அதில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள வானளாவிய கோபுரங்களும் கோயில்களும் முக்கியமானது. தமிழகத்தின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் எடுத்துக்காட்டும் ஆலய விழாக்கள் முக்கியமானது. அதில் மிகப் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றுதான் சித்திரையில் “அழகர் பெருவிழா.” ஆண்டுதோறும் மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர், ‘‘வைகை ஆற்றில் இறங்குதல்’’ பல்லாயிரக்கணக்கானோரை ஈர்க்கிறது. இந்த சித்திரைத் திருவிழாவைப் பற்றி பல்வேறு தகவல்களை இந்த தொகுப்பில் காண்போம்.

மதுரையின் சிறப்பு
மதுரை என்றாலே தமிழ். தமிழ் என்றாலே மதுரை. தமிழ்நாடு என்று நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது மதுரைதான். சங்கம் வளர்த்த மதுரை சுமார் 2,500 ஆண்டுகள் பழமையானது. கடம்ப மரங்கள் நிறைந்த வனப்பகுதியாக இருந்ததால் `கடம்பவனம்’ என்றும், மருத மரங்கள் அதிக அளவில் காணப்பட்டதால் `மருதை’ என்றும், அனைவரும் கூடி இலக்கிய கலந்துரையாடல் செய்தமையால் கூடல் மாநகர் என்றும், நீர் நிலைகளுக்கு நடுவே அமைந்தமையால் ஆலவாய் என்றும், கோட்டையின் நான்கு வாயில்கள் சங்கமிப்பதால் நான்மாடக் கூடல் என்றும் அழைக்கப்படும் பெருமைகளைக் கொண்டது.

வீதிகளில் தமிழ் மணம்
மதுரைக்குத்தான் எத்தனை பெயர்கள்?
* மல்லிகை மாநகர்,
* கூடல் நகர்,
* மதுரையம்பதி,
* கிழக்கின் ஏதென்ஸ்,
* நான் மாடக்கூடல்,
* மீனாட்சி பட்டணம்,
* ஆலவாய்
* கடம்பவனம்,
* அங்கண் மூதூர்,
* தூங்கா நகரம்,
*. கோயில் நகரம்,
* பூலோக கயிலாயம்.

சித்திரை வீதி, மாசி வீதி, ஆவணி வீதி என தமிழ் மாதங்களின் பெயராலேயே தெருப்பெயர்கள் அமைந்திருக்கும் சிறப்பு மதுரைக்கே உரியது. மாடக்குளம், ஆத்தி குளம், கரிசல் குளம் என நீர் நிலைகளின் பெயராலேயே கிராமங்களுக்கு பெயரை வைத்து நீருக்கு மரியாதையை செய்யும் வழக்கமும் அதிகம்.

ஆற்றைப் பார்த்தாயா? எம் அழகரைப் பார்த்தாயா?
மதுரை என்றாலே “விழாக்களின் நகரம்” என்று சொல்லுவார்கள். வருடம் முழுக்க ஏதேனும் ஒரு விழா நடந்து கொண்டே இருக்கும். அப்படி நடக்கின்ற விழாக்களில் மிக முக்கியமான விழா
* மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழா.
* அழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா.

அழகர் ஆற்றில் இறங்குவதைக் காணுவதற்கு உலகமெங்கும் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். ‘‘ஆற்றைப் பார்த்தாயா, எம் அழகரைப் பார்த்தாயா’’ என்கின்ற கூற்று இந்த விழாவின் சிறப்பினை எடுத்துரைக்கும்.

வைகை நதியின் சிறப்பு
சித்திரை விழாவில் மூன்று சிறப்புகள் உண்டு. ஒன்று மதுரை. இரண்டாவது அழகர் மலை. மூன்றாவது வைகை நதி. வைகை நதிக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? மீனாட்சி அம்மனின் திருமணத்திற்கு வந்த குண்டோதரன் என்ற அசுரன், தாகத்தால் சிவனை வேண்டினான். அப்போது சிவபெருமான், `வை… கை’ என்று குண்டோதரனுக்கு உத்தரவிட, வைகை பிறந்ததாக புராணங்கள் சொல்லுகின்றன.

சைவ – வைணவ ஒற்றுமைக்கு ஒரு பெயர்
சுவாரஸ்யமாக இன்னொரு செய்தி. திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்தின் ‘வை’யும் சிவபெருமானின் இருப்பிடமான கைலாயத்தின் ‘கை’யும் இணைந்து சங்கரநாராயணர்களின் இருப்பிடமான தீர்த்தமாக `வைகை’ அமைந்திருக்கிறது. வைகுதல் = தங்குதல், நிலைபெறுத்தல் என்ற ஒரு பொருளும் உண்டு.

அழகர் மலை
மதுரையின் சிறப்பையும், வைகையின் சிறப்பையும் பார்த்த நாம், மதுரைக்கு வந்து சித்திரை முழு நிலா நாளில் ஆற்றில் இறங்கும் அழகரின் சிறப்பையும், அவர் நின்று அருள் புரியும் அழகர் மலையின் சிறப்பையும் அறிய வேண்டும். அழகர் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இதற்கு வைணவத்தில் திருமாலிருஞ்சோலை என்கின்ற திருநாமம் உண்டு. சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாலிருங்குன்றம், குலமலை, குளிர்மலை, தென்திருப்பதி, உத்யான சைலம், இருங்குன்றம், வனகிரி, விருஷபாத்திரி அல்லது இடபகிரி முதலிய பல பெயர்கள் உண்டு. இது கிழக்கு மேற்காக 18 கி.மீ நீளமும் 320 மீட்டர் உயரமும் உடையது. அதிலிருந்து பல சிறிய மலைகள், நாலா பக்கமும் பிரிந்து போகின்றன.

இரண்டாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பழமை
மேலும், சிலப்பதிகார ஆசிரியர் ‘விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபில் புண்ணிய சரவணம், பவகாரணி யோடு இட்டசித்தி எனும் பெயர் போகி விட்டு நீங்கா விளங்கிய பொய்கை முட்டாச் சிறப்பின் மூன்றுள ஆங்கு’’ என்று மூன்று பொய்கைகள் இருப்பதாகவும் கூறுகிறார். ஆனால், நாம் அறிந்தது நூபுர கங்கை என அழைக்கப்படும் ஒரே ஒரு பொய்கை. இதன் மூலம் சிலப்பதிகாரத்திற்கு முன்பே அழகர் கோயில் அமைக்கப்பட்டது என தெரிய வருகிறது. ஆழ்வார்களின் காலத்திற்கு பிறகும் கோட்டைகள் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

நூபுரகங்கை நீரூற்று
அழகர்மலை அடிவாரத்திலிருந்து சுமார் 2 கி.மீ. உயரத்தில் பழமுதிர்சோலை முருகன் கோயில் உள்ளது. பழமுதிர்சோலை முருகன் கோயிலிலிருந்து ஒரு கிமீ தொலைவில் அமைந்த ராக்காயி அம்மன் நூபுரகங்கை நீரூற்று உள்ளது. எம்பெருமாள் திரிவிக்கிரம அவதாரம் எடுத்தான். அவருடைய ஒரு பாதம் உலகத்தை அளந்து கொண்டே அப்பாலுள்ள உலகங்களுக்குச் சென்றது. இந்திரலோகம் கடந்து சத்தியலோகம் சென்ற பொழுது இறைவனுடைய திருவடிகளுக்குப் பாத பூஜை செய்ய வேண்டும் என்று நினைத்த நான்முகன், தன்னுடைய கமண்டல நீரால் எம்பெருமானின் திருவடிகளை அபிஷேகம் செய்தான். அந்த கமண்டல நீரானது எம்பெருமானின் திருவடியில் அணிந்திருந்த பொற்சிலம்பு மீது பட்டு சிதறி பெருகி ஜீவநதியாய் ஓடிக் கொண்டிருக்கிறது.

பாவங்கள் தீர்க்கும் பவ நாசினி

எல்லா நீர் நிலைகளுக்கும் ஒரு உற்பத்தி இடம் உண்டு. ஆனால் சிலம்பாறு எங்கே உற்பத்தி ஆகிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. திருமாலிருஞ் சோலையில் ஆயிரக்கணக்கான தீர்த்தங்கள் இருந்தாலும் அழகர் நீராட்டம் காண நூபுர கங்கை தீர்த்தம்தான் வேண்டும். கற்கண்டு போன்ற சுவையுடன் இருக்கக்கூடிய இந்த தீர்த்தம் தவிர வேறு தீர்த்தத்தால் அழகருக்கு திருமஞ்சனம் செய்தால், அவருடைய மேனி கறுத்து விடுகிறது. சகல நோய்களையும் தீர்க்கக்கூடிய அற்புதமான மூலிகை தீர்த்தம் இது. பகவானுடைய திருவடியில் இருந்து தோன்றி நம்முடைய உடல் அழுக்கை மட்டும் அல்லாது மன அழுக்கையும் அகற்றுவதால் “புண்ணிய சுருதி” என்றும் “பாவ நாசினி” என்றும் சொல்வார்கள். ஐப்பசி துவாதசியில் இங்கு நீராடி அழகரை தரிசிப்பது பெரும் புண்ணியம்.பாதகங்கள் தீர்த்து பரமனடி காட்டும்.

ஆலயத்தில் எங்கும் அழகு, கலைநயம்
இங்கு பெருமான் மட்டும் அழகரல்ல. மலை அழகு. மண்டபங்கள் அழகு. சிலை அழகு. சோலைகள் அழகு. கண்ணதாசன் ஒரு பாடலில் இந்த அழகை ‘‘மலை அழகா? அழகர் சிலை அழகா’’ என்று வர்ணிப்பார். மூலவரின் கருவறை மீது எழுப்பப்பட்டுள்ள சோமசந்த விமானம் வட்ட வடிவமானது. ஆரியன் மண்டபத்தில் இசைத் தூண்கள் உள்ளன. கல்யாண சுந்தர வல்லி தாயாரின் சந்நதியும் கலைநயத்துடன் உள்ளது. ராயகோபுரம் திருமலை மன்னரால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறா நிலையில் உள்ளது. சிதைந்த நிலையிலும் இக்கோபுரத்தின் சிற்ப வேலைப்பாடுகள் சிற்பிகளின் உன்னத உளி வேலைப் பாட்டினை வெளிப்படுத்துகிறது.

கள்ளழகர் என்ற திருநாமம் ஏன்?
இந்த அழகு எவரையும் வசப்படுத்தும். எல்லோர் உள்ளத்தையும் அவர் அறியாமலேயே எடுத்துக் கொள்ளும் என்பதால் கள்ளழகர் என்று பெயர். “கோல மாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்லது ஓரெழில், நீல மேனி ஐயோ. நிறை கொண்டது என் நெஞ்சினையே.’’ என்றும், ‘‘வெண்ணை உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை” என்றும் திருப்பாணாழ்வார் பாடுகிறார். இந்த அழகைக் காணத்தானே சித்திரை விழாவில் 20 லட்சம் பேர் மதுரையில் கூடுகிறார்கள். அவ்வளவு பேரும் கூடுவதால் மதுரைக்கு கூடல் என்று பெயர்.

இன்னொரு காரணம்
கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (வளரி), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர். அழகர் கள்ளர் வேடத்தில் வருவதால், அழகர் என்ற பெயர் கள்ளழகர் என மாறியது.

திருமலை மன்னர் செய்த ஏற்பாடு
16ம் நுாற்றாண்டு வரை, அழகரின் சித்திரை உற்சவம் (சைத்ரோத்சவம்) சித்திரை மாதத்திலும், மீனாட்சி அம்மனின் உற்சவம் மாசி மாதத்திலும் நடைபெற்றது மீனாட்சி அம்மன் உற்சவத்தின் மிக முக்கியமான நிகழ்வு திருத்தேர் மாசி மாதத்தில் நடைபெற்றது. இந்த திருத்தேர் ஓடும் வீதிகளுக்கு மாசி வீதி என்றே பெயர். திருமலை மன்னர் காலத்திற்கு முன் கள்ளழகர் அழகர்கோவிலில் இருந்து புறப்பட்டு அலங்காநல்லுார், தேனுார் ஆகிய ஊர்கள் வழியாக சோழவந்தான் வந்து அங்குள்ள வைகையாற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா சித்திரை மாதத்தில் முழு நிலவன்று நடைபெற்றது.

மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில், வெவ்வேறு மாதங்களில் நடைபெறும் இந்த விழா ஒரே மாதத்தில் நடைபெற்றால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று, கள்ளழகரை “மதுரை வைகையாற்றில்” எழுந்தருளச் செய்து, மதுரை சித்திரைத் திருவிழாவாக நடத்தினார்.

வைணவ தலபுராணம் கூறும் கதை
சைவத்தில் தங்கை மீனாட்சி திருமணம் காண, மதுரை வரும் அழகர், திருமணம் முடிந்ததால், வைகை ஆற்றுக்கு வந்து திரும்புவதாக சொல்கிறார்கள். ஆனால், வைணவ தலபுராணம் கூறும் கதை வேறு. சுதபமுனிவர் திருமாலிருஞ்சோலையில் உள்ள நூபுர கங்கை எனும் சிலம்பாற்றில் நீராடும்போது துர்வாச முனிவரை கவனியாது இருக்கக்கண்டு கோபமுற்ற துர்வாசர் சுதபமுனிவரை மண்டூகமாக (தவளை) மாறும்படி சாபமிட்டார். சுதபமுனிவர் வைகை ஆற்றில் மண்டூக வடிவில் தவமியற்றி திருமாலால் சாபம் நீங்கப் பெற்றார். முனிவர் கண்டு வணங்கிய அவ்வுருவே சுந்தரபாஹூ என்று வடமொழியிலும் அழகர், மாலிருஞ்சோலைநம்பி என்று தமிழிலும் வழங்கப்படுகிறது.

பக்தர்களின் ஆரவாரம்
1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். லட்சக்கணக்கான பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். தல்லாகுளம் பெருமாள் கோயிலிருந்து தங்கக் குதிரை வாகனத்தில் வைகையை நோக்கி புறப்படும் முன்பு, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வந்திருக்கும் ஆண்டாளின் மாலையைச் சூடிக்கொள்வார். ஸ்ரீஅழகர் ஆற்றுக்குச் செல்லும் பொழுது முதலில் வெட்டி வேர் சப்பரத்திலும், பிறகு மைசூர் மண்டபத்திலிருந்து ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருளும் காட்சியைக் காண கண் கோடி வேண்டும். தல்லாகுளத்தை விட்டு தங்கக்குதிரை கள்ளழகர் கிளம்பியதுமே வைகை ஆற்றில் காத்திருக்கும் பக்தர்களின் ஆரவாரம் ஆரம்பமாகிவிடும். வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் போது “கோவிந்தா கோவிந்தா” என்ற சரணகோஷமும், வேட்டுச்சத்தமும் விண்ணைப் பிளக்கும். மதுரைக்கு வரும் அழகரை பக்தர்கள் சர்க்கரைக் கிண்ணத்தில் தீபம் ஏற்றி எதிர் கொண்டு அழைப்பார்கள்.

அழகர் என்ன பட்டு உடுத்தப் போகிறார்?
அழகர் ஆற்றில் இறங்கும் போது என்ன வண்ணத்தில் பட்டு உடுத்துவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உண்டு. முதல் நாள் அர்ச்சகர் கனவில் இன்ன வண்ணப்பட்டு என்று சொல்லி, அர்ச்சகர் அந்த வண்ணம் சாற்றுவார் என்று சொல்கிறார்கள். இன்னொரு விதமாகவும் அழகரின் பட்டு தேர்ந்தெடுக்கப்படுகிறது. அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா, என பல வண்ணங்களில் பட்டுப் புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை வருகிறதோ, அது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் தினம் அணிவிக்கப்படும்.

அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது – கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
* பச்சைப் பட்டு கட்டி வந்தால், நாடு செழிப்பாக இருக்கும்.
* சிவப்புப் பட்டு கட்டிவந்தால், அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது, நாட்டில் அமைதியும் இருக்காது.
* வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால், நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும்.
* மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும்.

இப்படி நம்பிக்கை இருப்பதால் `ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?’ எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். மதுரை ஆற்றில் கள்ளழகர் விழா காண்பது போலவே, மானாமதுரையில் சுந்தரவரதரும், பரமக்குடியில் ஸ்ரீசுந்தரராஜப் பெருமாளும் ஆற்றில் இறங்குகிறார்கள்.

இந்த வருடம் அழகர் என்ன வண்ணப் பட்டு உடுத்தி வருகிறார் என்று…

Tags : Kallazhagar ,Vaigaiathar Emmundarulal ,Tamil Nadu ,
× RELATED உணவுக்கும் உணர்வுக்கும் தொடர்பு உண்டா?