×

உணவுக்கும் உணர்வுக்கும் தொடர்பு உண்டா?

?மகாபாரதத்தின் சிறப்பாக எதைச் சொல்லலாம்?
– பாலாஜி, சைதாப்பேட்டை.

மகாபாரதத்தின் சிறப்பாக நிறைய விஷயங்களைச் சொல்லலாம். இதிகாசங்களில் தலைசிறந்தது. ஐந்தாவது வேதம் என்று சொல்வார்கள். ஆனால், அதில் மூன்று முக்கியமான விஷயங்கள் உண்டு. ஒன்றுபகவத்கீதை. இன்னொன்று விஷ்ணு சகஸ்ரநாமம். மூன்றாவது விதுரநீதி. ஒன்று தத்துவம். இன்னொன்று பக்தி. மூன்றாவது அறம்.இதில் மனிதன் இறைவனுக்குச் சொன்னது விஷ்ணு சஹஸ்ரநாமம். இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை. மனிதன் மனிதனுக்குச் சொன்னது விதுரநீதி.

?ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி போன்ற மகான்களுக்குக் கூட புற்றுநோய் வந்து அவதிப்பட்டதாக அவர்களுடைய வரலாறு இருக்கிறது, என்ன காரணம்?
– வாசுதேவன், திருச்சி.

இதற்கு இரண்டு விதமாக விளக்கத்தைச் சொல்கிறார்கள் பெரியவர்கள். இந்த பூமி கர்ம பூமி. இந்த பூமியில் இறைவன் அவதாரம் எடுத்தாலும் கூட, தான் எடுத்த பாத்திரத்துக்குத் தகுந்தபடி சில கஷ்ட நஷ்டங்களை அனுபவிக்கிறான். மகான்கள் வரலாறும் அப்படித்தான். சுவாமி சின்மயானந்தா ஒருமுறை விளக்கம் தரும் பொழுது, கர்ம பூமியில் மகான்கள் பிறந்தாலும் கூட, அவர்கள் பிராரப்த கர்மம் என்பதை அனுபவிக்கிறார்கள். பிராரப்த கர்மம் என்பது வில்லிலிருந்து விடுபட்ட அம்புபோல. அது இலக்கை அடையாமல் நிற்பதில்லை. மகான்களாக இருந்தாலும் கூட அனுபவிக்கிறார்கள்.

இரண்டாவது ஒரு விளக்கம். மகான்கள் தங்களுடைய கர்மாவின் அடிப்படையில் கஷ்டங்களை அனுபவிப்பது இல்லை. பிறருடைய கஷ்டங்களை தாங்கள் எடுத்துக் கொண்டு அனுபவிக்கிறார்கள். இப்படி ஒருவருடைய கஷ்டத்தை இன்னொருவர் எடுத்துக்கொள்ள முடியுமா, என்றால் ஞானிகளுக்கு அது முடியும். ஆளவந்தாருக்கு வந்த ராஜபிளவை என்கிற நோயை, மாறனேரி நம்பி என்கிற அவருடைய சீடர், ஆச்சாரிய பிரசாதமாக ஏற்றுக் கொண்டார் என்று வருகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், மகான்கள் நமக்காக இத்தகைய கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள்.

?நம்பிக்கைதான் பக்தியா?
– தண்டாயுதபாணி, வத்திராயிருப்பு.

வேறு என்ன? நம்பிக்கை இல்லாமல் பக்தி எப்படி இருக்கும்? அப்படி இருந்தால் என்ன பயன்?

?நல்லவற்றை விட தீய செய்திகளும் தீய நடவடிக்கைகளும் வெகுவேகமாகப் பரவுகிறது? அதைத்தான் மக்கள் விரும்புகிறார்களா?
– ராஜேஷ், பெங்களூரு.

மக்கள் எப்பொழுதும் தீய செயல்களை விரும்புவதில்லை. ஆனால் ஏதோ ஒரு வகையில் இச் செயல்கள் அவர்களுடைய கவனத்தை ஈர்க்கிறது. உளவியல் ரீதியாக எதிர்மறை செய்திகள் அதிகம் ஈர்க்கும். கவனத்தைக் கவரும். இரண்டு பேர் சிரித்துக்கொண்டே பேசுவதை அதிகம் கவனிக்க மாட்டார்கள். ஆனால், இரண்டு பேர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் அத்தனைப் பேரும் பார்ப்பார்கள்.
ஒரு இனிமையான மெல்லிய செய்தியை காது உணர்வதற்கு முன்னால் ஒரு பெரும் சப்தம் காது மடலை அதிரச்செய்து கவனத்தை ஈர்க்கும். எதிர்மறைச் செய்திகளாக இருந்தாலும் கூட அதன் மூலம் நேர்மறை எண்ணம் வந்தால் சரிதான். நல்லவற்றைப் பார்த்து இப்படி இருக்க வேண்டும் என்றும், தீயவற்றை பார்த்து இப்படி இருக்கக்கூடாது என்றும் தெரிந்துகொண்டால் நல்லது.

?உணவுக்கும் உணர்வுக்கும் தொடர்பு உண்டா?
– ராஜ்குமார், திருவண்ணாமலை.

உண்டு. இந்த விஷயத்தை நாம் வேறு மாதிரி போட்டுக் குழப்பிப் கொள்ளக் கூடாது. சாத்வீகமான மென்மையான உணவுகள், உணர்வுக்கும் உயிருக்கும் நல்லது. உதாரணமாக ஒரு கீரை உணவு சாப்பிட்டவுடன் நம்முடைய மனம் மென்மையாக இருக்கும். வயிறு சுகமாக உணரும். இதே கொஞ்சம் காரம் மசாலா, எண்ணெய், டால்டா வைத்துத் தயாரித்தது என்றால், அந்த நேரத்துக்கு சுவையாக இருக்குமே தவிர, வயிறு சங்கடப் படுவதை உணர முடியும். செரிமானக் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

இப்பொழுது உடல் ரீதியாகவும் துன்பப்படுகிறோம். உடல் துன்பப் படும்போது மனதும் துன்பப்படுகிறது. இப்பொழுது யோசித்துப் பாருங்கள். சாப்பிட்ட உணவுக்கும் உணர்வுக்கும் சம்பந்தம் உண்டா இல்லையா என்பது உங்களுக்கே தெரியும்.. முன்னால் சொன்னது சாத்வீக உணவு. பின்னால் சொன்னது ராஜச உணவு. கெட்டுப் போன பழைய உணவுகளை தாமச உணவுகள் என்று சொன்னார்கள். அதைச் சாப்பிட்டாலும் பிரச்சனை வருவதோடு தூக்கமும் சோம்பலும் அதிகரிக்கும். உடலுக்கு கேடு தரும். இப்படித்தான் உணவைக் குறித்து புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, வேறு வகையில் போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது.

?கடவுளிடம் நம்பிக்கை உள்ளவர்கள் ஏன் வைத்தியம் பார்த்துக் கொள்ள வேண்டும்? தங்கள் வீட்டை பூட்டு போட்டுப் பாதுகாக்க வேண்டும்?
– லலிதாதேவி, மயிலாடுதுறை

இதைப் போன்ற கேள்விகளை நம்முடைய சான்றோர்கள் சந்தித்திருக்கிறார்கள். அதற்கு விடையும் சொல்லி இருக்கிறார்கள்.ஒரு ஆசிரியர் மாணவரிடம் பாடம் நடத்தும்போது சொன்னார். “எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான்”.பாடம் முடிந்து மாணவன் வீட்டுக்குத் திரும்பும் போது ஒரு முரட்டு மாடு அவனைத் துரத்திக் கொண்டு வந்தது.எல்லோரும் ஓடும்போது இவன் நின்றான்.

மாட்டுக்கு சொந்தக்காரன் “வழியில் நிற்காதே, மாடு முட்டி விடும். நகர்ந்து செல்.” என்றெல்லாம் கத்தியதை ஏற்காமல் அப்படியே நின்றிருந்தான்.
ஆவேசமாக வந்த மாடு இவனை முட்டித் தள்ளியது. அதற்குள் மாட்டுக்கு உரியவன் மாட்டைப் பிடித்துக் கொண்டான். இவன் சிறு காயத்தோடு தப்பித்தான்.
அடுத்த நாள் ஆசிரியரிடம் “ஐயா நீங்கள் சொன்னபடி எல்லா உயிர் களிலும் இறைவன் இருக்கிறான். இந்த மாடும் இறைவன் தானே என்று நான் நின்று கொண்டிருந்தேன். இறைவன் என்னைக் காப்பாற்ற வில்லையே,” என்றான்.

ஆசிரியர் சொன்னார்.“மாட்டுக்கு உரியவரும் மற்றவர்களும் மாடு வேகமாக வருகிறது கொஞ்சம் நகர்ந்து செல், நகர்ந்து செல்” என்று இறைவன் சார்பில் கூப்பாடு போட்டார்களே, அதுவும் இறைவன் எச்சரிக்கைதான் ,உன்னைக் காப்பாற்றத்தான் என்று ஏன் நீ எடுத்துக் கொள்ள வில்லை?”என்று கேட்டாராம்.இன்னும் இதைப் புரிந்து கொள்ள அருமையான ஒரு கதை உண்டு.

ஒரு ஞானி பாலைவனத்தில் வசித்துக் கொண்டிருந்தார். அவரைக் காண பலரும் ஒட்டகங்கள் ஏறி ஆசிரமத்துக்கு வருவார்கள். ஒருமுறை வெளியூர்க்காரன் ஒருவன் அவரைக் காண வந்திருந்தான். ஞானி ஒரு சிறிய கூடாரத்தில் தங்கி இருந்தார் அவருக்கு வணக்கம் தெரிவித்தான். அவன் வெகு தொலைவில் இருந்து வந்திருப்பதை அறிந்து கொண்ட ஞானி “எப்படி வந்தாய்?” என்று கேட்க “ஒட்டகத்தில் ஏறி வந்தேன்” என்றான் அவன்.

“சரி ஒட்டகம் எங்கே?” என்று ஞானி கேட்டார். “வெளியில் நிறுத்தி உள்ளேன்” என்று வந்தவன் பதில் சொல்ல ஞானி கேட்டார் “அதனைக் கட்டிப் போட்டு வந்தாயா?”.
இப்பொழுது ஒட்டகத்தில் வந்தவன் சொன்னான் “இல்லை ஐயா. எனக்கு கடவுள் மீது முழு நம்பிக்கை உண்டு அவர் பார்த்துக் கொள்வார்” என்றவுடன் ஞானி கோபத்துடன், “முட்டாள்! போய் உடனே ஒட்டகத்தைக் கட்டிப் போடு.கடவுளுக்கு நிறைய வேலை உண்டு உன் ஒட்டகத்தைப் பார்த்துக் கொண்டிருக்க அவருக்கு நேரம் கிடையாது” என்று அவனைத் திட்டி
அனுப்பினாராம்.

நோய் வந்துவிட்டது. அதிலிருந்து தப்பிக்கத் தான் மருந்துகளையும் மருத்துவர்களையும் இறைவன் படைத்திருக்கிறான் என்பதை உணர்ந்துகொண்டு மருத்துவம் பார்த்துக் கொள்ள வேண்டும். நம்முடைய சோம்பேறித்தனத்திற்கு கவசமாக இறை நம்பிக்கையை வைக்கக்கூடாது.இதை ஒரு பழமொழியாகச் சொல்வார்கள். “இறைவனிடம் பூரண நம்பிக்கை வையுங்கள். ஆனால் குதிரை லாயத்தை பூட்ட மறந்து விடாதீர்கள்”

?நோய்களின் தாயகம் எது?
– மணிபாலன், விருத்தாசலம்.

மனம் தான். அங்கிருந்துதான் நோய் தோன்றுகிறது அல்லது தோன்றிய நோய்கள் வளர்ச்சி அடைகின்றன மற்றைய உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்க மனம் மட்டும் பாதிப்படைந்தால் மனநோய் என்கிறோம் பேசுவதையே பேசுவது, வன்முறையுடன் நடப்பது, கிழிந்த ஆடையுடன் ஒழுங்கின்றித் திரிவது என்று இவர்களை நாம் அடையாளப்படுத்துகிறோம் .ஆனால் உளவியல் கருத்து ஒன்று, கிட்டத்தட்ட நம் அனைவரையுமே ஒருவகையில் மன நோயாளிகள் என்கிறது.ஒரு கவிதை படித்தேன். சுருக்கென்றது எல்லா மனிதனும் ஒரு வகையில் மன நோயாளிகள் தான் சிலர் கிழிந்த சட்டையுடன் பலர் கிழிந்த மனதுடன்”உண்மைதானே!

?பிறந்த நட்சத்திரத்தில் (ஜென்ம நட்சத்திரம்) சொத்து வாங்கலாமா?
– வெங்கட்ரமணன், கும்பகோணம்.

வாங்கலாம். அதிலொன்றும் தவறில்லை. அன்றைய தினத்தில் ராகு காலம் பார்த்துவிட்டு கையெழுத்து போட்டு வாங்கலாம்.

?சில நட்சத்திரத்தில் ஒருவர் இறந்தால் சில மாதங்கள் வீடுபூட்டி வைக்க வேண்டும் என்கிறார்களே ஆறு மாதம், மூன்று மாதம் எல்லாம் வீட்டை பூட்டி வைப்பது சாத்தியமா?
– சண்முகம், காஞ்சிபுரம்.

சில விஷயங்களை சாஸ்திர ரீதியாகச் சொல்லுகின்ற பொழுது, நடைமுறைக்கு ஒத்து வராத நிலையில், அதற்கான மாற்று வழிகளையும் சொல்லுவார்கள். நீங்கள் சொல்வது இறந்தால் தோஷம் உள்ள நட்சத்திரங்களை பற்றிய தனிஷ்டா பஞ்சமி என்று சொல்லப்படும் விஷயம். உதாரணமாக உத்தர நட்சத்திரத்தில் ஒருவர் இறந்து போனால் மூன்று மாதம் வீடு மூடப்பட வேண்டும் என்று போட்டிருக்கும்.

வீட்டைப்பூட்டிவிட்டு எங்கே போய் வாழ்வது.?

ஆனால் அதே பஞ்சாங்கத்தில் அதற்கான மாற்றுவழி கொடுத்திருக்கிறார்கள். அதாவது அந்த இறந்தவர் உபயோகித்த பொருள்களை ஒரு பெட்டியில் போட்டு பூட்டி வைத்து, அந்தப் பெட்டி மீது மூன்று மாதம் வரை ஒரு வெண்கலக் கிண்ணத்தில் நல்லெண் ணெய் தீபம் வைத்து காலையிலும் மாலையிலும் வழிபாடு நடத்த வேண்டும். மூன்று மாதம் ஆனவுடன் அந்தக் கிண்ணத்தை தானம் செய்துவிட வேண்டும். இது எளிய வழிதானே. எனவே சாஸ்திரங் களில் நடைமுறைக்கு ஏற்ற மாற்று வழிகளும் உண்டு.அதை உரியவர்களிடம் கேட்க வேண்டும்.

?மந்திரங்களை வாய்விட்டுச் சொல்லலாமா?
– கார்த்திக், திருவள்ளூர்.

“வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க” என்பது ஆண்டாள் வாக்கு. அர்ச்சனை செய்யும்போது வாய்விட்டுச் சொல் லுங்கள். ஜபம் செய்யும் போது மனதுக்குள் சொல்லுங்கள்.

தேஜஸ்வி

Tags : Balaji ,Saithappettai ,
× RELATED பஞ்சாமிர்தம் அபிஷேகத்தால் மனம் குளிரும் அனுமன்