×

மண் மணம் பேசும் பாரம்பரிய மங்கு பொருட்கள்!

நன்றி குங்குமம் தோழி

நாம சாப்பிடும் உணவுகளுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தினை அதனை சமைக்க பயன்படுத்தப்படும் பாத்திரத்திற்கும் கொடுக்க வேண்டும். மாடூலர் கிச்சன் என்ற பெயரில் சமையல் அறைக்கும் சமையல் பாத்திரங்களுக்கும் நவீனம் பூசினாலும் பாரம்பரிய பாத்திரங்களில் செய்யப்படும் உணவுகளே சுவையும் ஆரோக்கியமும் தரும். அத்தகைய சுவையான, சத்தான சமையலை மங்கு பாத்திரங்கள் மூலம் செய்ய முடியும் என்கின்றனர் ‘அகவை’ நிறுவனத்தினர். ‘‘மங்கு பாத்திரங்கள் (Enamel ware) 19ம் நூற்றாண்டின் முற்பகுதிகளில் செட்டிநாடு வீடுகளின் திருமண சீர்வரிசைக்கும் சமையலுக்கும் பயன்படுத்தப்பட்ட அழகான உலோக பாத்திரங்கள்.

ஆனால், அவை நம் நாட்டில் தயாரிக்கப்பட்டவை அல்ல. ஜப்பான், இங்கிலாந்து, ஸ்வீடன் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு செட்டிநாடு குடும்பத்தினரால் பரம்பரையாக பயன்படுத்தப்பட்டு வந்தன. இதன் சிறப்பம்சமே அதன் அழகான வடிவமைப்பு மற்றும் தரம். வெள்ளை அல்லது வெளிர் நிறங்களில் பூக்கள் டிசைன்கள் கொண்டு வரும். மங்கு பொருட்களை வாங்கும் போது அதன் எனாமல் கோட்டிங் நன்றாக இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்’’ என்று பேசிய ஐஸ்வர்யா, ‘அகவை’யின் பிசினஸ் பயணத்தைப் பகிர்ந்தார்.

‘‘நான், பூங்குயிலி, நித்யா, பவித்ரா நாலு பேரும் நெருங்கிய தோழிகள். ஒரே மாதிரியான சிந்தனை உடையவர்கள். பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஒன்றாக படிச்சோம். ஒரு காலக்கட்டத்தில் எங்களுக்கும் தேவைகள் இருந்துச்சு. அதனால் ஏதாவது பிசினஸ் செய்யலாம்னு யோசித்தோம். சந்திக்கும் போது எல்லாம் அது பற்றித்தான் பேசுவோம். யாரும் பண்ணாத ரொம்ப யூனிக்கான பிசினஸா இருக்கணும். வீடு சார்ந்த பொருட்களை விற்பனை ெசய்யலாம்னு யோசிச்சோம்.

நாங்க இல்லத்தரசிகள் என்பதால் அவர்களின் தேவை என்ன என்று பட்டியலிட்டோம். இல்லத்தரசிகள் பொதுவாக அவர்களின் வீடு அழகாக, சுத்தமா இருக்கணும்னு நினைப்பாங்க. அதே போல குடும்பத்தினருக்கு சுவையான, சத்தான சமையலை செய்து தர விரும்புவாங்க. அந்த அடிப்படையில்தான் கடந்த 2025ல் சித்திரை முதல் நாள் ‘அகவை’ உருவாச்சு. ‘அகவை’ என்றால் ‘வயது’, காலம் என்பது பொருள். எங்கள் விற்பனை பொருட்களும் காலத்திற்கும் அழியாமல் காலம் கடந்தும் எங்களைப் பற்றியும் நம் தமிழ் மரபையும் பேச வேண்டும்.

அத்தகைய பொருட்களில் ஒன்றுதான் மங்கு பாத்திரங்கள். ஆரம்பத்தில் இந்தப் பொருட்களை எப்படி மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது போன்ற சவால்கள் இருந்தன. நாளடைவில் பொருட்களின் தனித்தன்மை பயன்பாடு குறித்து சமூகவலைத்தளத்தில் வீடியோவினை பதிவு செய்த பிறகு நல்ல வரவேற்பு கிடைத்தது’’ என்று பூரிப்புடன் கூறிய ஐஸ்வர்யாவை தொடர்ந்தார் நித்யா.

‘‘எங்களுடையது ஆன்லைன் ஸ்டோர். எங்க நால்வருக்குமே கலை மற்றும் கலை சார்ந்த பொருட்கள் மேல் பிரியம் அதிகம். அந்த மாதிரி பொருட்களை எங்குப் பார்த்தாலும் உடனே வாங்கிடுவோம். அது போன்ற நாம் அன்றாடம் உபயோகப்படுத்தக்கூடிய பொருட்களை விற்கலாம்னு முடிவு செய்தோம். முதலில் வீட்டை அலங்கரிக்கும் ஆன்டிக் பொருளான கேரளா முரல் பெயின்டிங்கினை விற்பனை செய்ய ஆரம்பித்தோம். நல்ல வரவேற்பு கிடைச்சது. இவை தவிர மரவேலைப்பாடுகள் கொண்ட பொருட்கள்.

மேலும், கைவேலைப்பாடு வல்லுநர்களை வைத்தும் டிசைன் செய்து விற்பனை செய்கிறோம். எங்களின் முக்கிய நோக்கமே அழிந்து வரும் நம் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் மற்றும் கலையினை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதனைத் தொடர்ந்து இந்தியாவின் அனைத்து மாநிலத்தில் உள்ள பாரம்பரிய பொருட்கள் மற்றும் ஆடைகளையுமே விற்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். இன்னும் இரண்டு மாதங்களில் அதற்கான வேலைகளை தொடங்கிவிடுவோம்’’ என்கிறார் நித்யா.

‘‘வீட்டு அலங்கார பொருட்களில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், கொலு பொம்மைகள், எல்லோர் வீட்டிலேயும் கண்டிப்பாக இருக்க வேண்டிய காமதேனு விளக்குகள், மற்ற வித்தியாசமான விளக்குகள், புதுமனை புகுவிழா போன்ற விழாக்களுக்கான வித்தியாசமான பரிசுப் பொருட்கள், பித்தளை பொருட்கள், கடவுள் உருவங்கள், தேக்கு மற்றும் மா மரத்தலான மரச்சாமான்கள், கூடைகள், டிரேக்கள், துளசி மாடங்கள், பல்லாங்குழி போன்ற பழங்கால விளையாட்டுப் பொருட்கள் என பலவற்றை விற்பனை செய்கிறோம். எல்லா பொருட்களும் தனித்தன்மை வாய்ந்தவை’’ என்று பேசத் துவங்கினார் பூங்குயிலி.

‘‘இதனைத் தொடர்ந்து சமையல் பாத்திரங்களையும் விற்பனை செய்யலாமே என்று யோசித்தோம். அப்படி கொண்டு வந்ததுதான் மங்கு பொருட்கள். அவற்றின் தரமும் அழகும் எங்களை மிகவும் கவர்ந்தது. இது நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் போல இருக்காது. இரும்பால் ஆனவை. எனாமல் கோட்டிங் போடப்பட்டிருக்கும். அதன் சிறப்பம்சமே ஸ்லோ குக்கிங். அதிக தீயில் சமைக்கக் கூடாது. எந்தவொரு பொருளை வாங்கினாலும் முதலில் நாங்க அதை பயன்படுத்தி பார்த்த பிறகுதான் விற்பனைக்கு கொடுப்போம். அப்போது தான் பொருட்களின் நிலைத்தன்மை, தரம் பற்றி தெரியும். தரத்தில் கொஞ்சம் மாற்றம் இருந்தாலும் நாங்க அதை விற்பனை செய்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். மங்கு பொருட்களை நான்கு வருடங்களாக நாங்க பயன்படுத்தி வருகிறோம்.

பொருட்களின் விலையை தாண்டி தரமாக இருக்கிறது என்று எல்லோரும் சொல்ல வேண்டும் என்று நினைத்தோம். மங்கு பொருட்கள் செட்டிநாடு பகுதிகளைச் சேர்ந்த மக்களால் மிகவும் விரும்பப்பட்டு 150 வருடங்களாக இன்றளவிலும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. செட்டிநாடு காரைக்குடியில் மட்டுமே இந்தப் பொருட்கள் கிடைக்கும். இட்லி தோசை மாவை இதில் அரைத்து வைத்தால் ஒரு வாரம் வரை மாவு புளிக்காது’’ என்றார் பூங்குயிலி. ‘‘எங்களுடைய பெஸ்ட் செல்லிங் இந்த மாவு போசிதான்’’ என்கிறார் பவித்ரா.

‘‘மங்கு பொருட்களில் பிரியாணி பாட், சாஸ் பேன், கரிச்சட்டி, டீ பாத்திரங்கள், எண்ணெய் தூக்கு பாத்திரங்கள் மட்டுமில்லாமல் பேக்கிங் செய்வதற்கான பாத்திரங்களும் உள்ளன. இந்தப் பாத்திரங்களை உள்ளே இருக்கும் கோட்டிங் போகும் வரை பயன்படுத்தலாம். துரு பிடித்தால் பயன்படுத்தக் கூடாது. ஆனால், எளிதில் துரு பிடிக்காது, பல ஆண்டுகள் வரை அந்த கோட்டிங் அப்படியே இருக்கும். இவை மட்டுமில்லாமல் எங்களின் அடுத்த சிக்னேச்சர் பொருள் ஆத்தங்குடி டைல்ஸ் மேஜை. செட்டிநாடு வீட்டில் பதிக்கப்படும் ஆத்தங்குடி டைல்ஸினை பயன்படுத்தி தேக்கு மரத்தில் மேஜை செய்து விற்பனைக்கு வைத்தோம். நல்ல வரவேற்பை பெற்றது.

எங்களுடையது ஆன்லைன் பிசினஸ் என்பதால் பொருட்களை எங்க நால்வரின் வீட்டில்தான் வைத்திருக்கிறோம். வாடிக்கையாளர் ஆர்டர் செய்வதை எங்க வீட்டில் இருந்தே நேரடியாக அனுப்பி விடுவோம். நாங்க நால்வர் என்பதால் ஒவ்வொருவரும் ஒரு வேலையினை பிரித்துக் கொண்டு இருக்கிறோம். நானும் நித்யாவும் பொருட்களை வாங்குவது மற்றும் டெலிவரி பார்த்துக் கொள்கிறோம். ஐஸ்வர்யா மற்றும் பூங்குயிலியும் மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் பார்த்துக் கொள்கிறார்கள். நாலு பொண்ணுங்க சேர்ந்தா ஊர் வம்பு பேசுவாங்கன்னு சொல்வாங்க. பெண்கள் ஒன்று சேர்ந்தால் ஆக்கப்பூர்வமாகவும் செயல்படுவோம் என்பதற்கு நாங்கதான் முன்னுதாரணம்’’ என்றனர் நான்கு தோழிகளும் கோரஸாக.

தொகுப்பு: கலைச்செல்வி

Tags : Modular Kitchen ,
× RELATED சமூக மாற்றத்திற்கான ஒரு இளம்பெண்ணின் குரல்!