×

நியூஸ் பைட்ஸ்

நன்றி குங்குமம் தோழி

புத்தக விற்பனையில் சாதனை!

உலகளவில் அதிகமாக விற்பனையான புத்தகங்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது அகதா கிறிஸ்டி எழுதிய புத்தகங்கள். மர்ம நாவல்களை எழுதுபவர்களில் உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக கொண்டாடப்படுகிறார் இவர். இங்கிலாந்தில் பிறந்து, வளர்ந்த அகதா 66 துப்பறியும் நாவல்களையும், 14 சிறுகதை தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். இதில் ‘மர்டர் ஆன் த ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்’, ‘டெத் ஆன் த நைல்’, ‘அண்ட் தன் தேர் வேர் நன்’ போன்ற மர்ம நாவல்கள் உலகப் புகழ்பெற்றவை.

விற்பனையிலும் சக்கைப்போடு போட்டவை. மட்டுமல்ல, அகதா எழுதிய நாவல்களைத் தழுவி முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 1976ம் வருடம் மரணமடைந்தார் அகதா. இவர் எழுதிய புத்தகங்கள் இதுவரைக்கும் 200 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்திருக்கின்றன. அகதாவின் புத்தகங்கள் அதிகபட்சமாக 400 கோடிப் பிரதிகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தரமான குடிநீர்

உலகிலேயே தரமான குடிநீரைக் கொண்ட டாப் 10 நாடுகளின் பட்டியல் வெளியாகிறது. நாட்டின் உள்கட்டமைப்பு, சூழலியல் மேலாண்மை, பொதுச் சுகாதாரம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு குடிநீரின் தரம் சோதனை செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, ஒரு நாட்டில் கிடைக்கும் குடிநீரால், அங்கே வசிக்கும் மக்களின் ஆரோக்கியத்துக்கு என்னென்ன மாதிரியான நன்மைகளும், தீமைகளும் ஏற்படுகின்றன என்பதை பொதுச் சுகாதாரத்தின் மூலம் கணக்கிடப்படுகிறது.

குடிநீரின் தரத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதால் இந்தச் சோதனை முதன்மையாக கருதப்படுகிறது. இந்த வகையில் தரமான குடிநீரைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அங்கே தண்ணீரின் மூலமாக பெரிதாக யாருக்குமே ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுவதில்லை. ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, நார்வே, லக்ஸம்பெர்க் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.180 நாடுகளை ஆய்வுக்குட்படுத்தியதில் இந்தியாவுக்கு 144-வது இடம்தான் கிடைத்திருக்கிறது.

பார்பி ரோல் மாடல்

உலகின் பல்வேறு துறை களில் சிறந்து விளங்கும் பெண் ஆளுமைகள் மற்றும் சமூகத்திற்குச் சிறப்பான பங்களிப்பை வழங்கிய பெண்களை கௌரவிக்கும் விதமாக அவர்களை போல பார்பி பொம்மைகள் உருவாக்கப்படுகின்றன. இதை பார்பி’ஸ் ரோல் மாடல் என்கின்றனர். சமீபத்தில் 2024 முதல் 2026ம் வருடத்துக்கான பார்பி’ஸ் ரோல் மாடல் பட்டியல் வெளியானது.

இதில் கருப்பின மக்களுக்காக குரல் எழுப்பி வரும் அமெரிக்க நடிகையான வயோலா டேவிஸ், கனடாவின் பிரபல பாடகி மற்றும் பாடலாசிரியான சானியா டுவைன், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக இயங்கி வரும் நடிகையான ஹெலன் மிரேன், பிரபல டென்னிஸ் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோருடன் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனாவின் பெயரும் இடம்பிடித்துள்ளது. பார்பி ரோல் மாடலில் இடம் பிடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மந்தனாதான்.

ெஹ்லிகாப்டர் விவசாயி

நொய்டாவைச் சேர்ந்த விவசாயியான சிவம் பிரஜாபதியை பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாக். உள்ளூரில் வேலைக்கு ஆட்களை அனுப்பும் சப் கான்ட்ராக்டர் வேலையை செய்து வந்த சிவம், இன்று கோடீஸ்வரராக மாறிவிட்டார். ஆம்; நொய்டாவின் முக்கியமான பகுதியில் சிவத்துக்குச் சொந்தமான நிலம் இருந்தது. அந்த நிலத்தை நொய்டா சர்வதேச விமான நிலைய திட்டத்துக்காக கையகப்படுத்தியிருக்கின்றனர். நிலத்துக்கு ஈடாக 15 கோடி ரூபாயை சிவத்துக்குக் கொடுத்திருக்கின்றனர்.

ஒரே நாளில் கோடீஸ்வரரான சிவம் திக்குமுக்காடிப் போனார். நண்பர்களுடன் தாய்லாந்துக்குச் செல்ல வேண்டும், சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்க வேண்டும் என்பது அவரது நீண்ட கால கனவு. பணம் கிடைத்தவுடன் ஹெலிகாப்டர் வாங்கிவிட்டார். நண்பர்களுடன் தாய்லாந்து செல்வதற்காக திட்டத்தில் இருக்கிறார். தவிர, ஒரு குறிப்பிட்ட தொகையை பல்வேறு முதலீட்டுத் திட்டங்களில் போட்டிருக்கிறார். இதனால் மாதந்தோறும் நிலையான வருமானமும் அவருக்குக் கிடைக்கப்போகிறது. இத்தனைக்கும் சிவம் பிரஜாபதியின் வயது 26தான்.

இமயமலைக்கு சைக்கிள் பயணம்

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த திவ்யா சிங் என்ற பெண், சைக்கிளிலேயே எவரெஸ்ட் பேஸ் கேம்ப்பை அடைந்திருக்கிறார். காத்மாண்டிலிருந்து எவரெஸ்ட் வரை சைக்கிளிலேயே சென்றிருக்கிறார் திவ்யா. கடுமையான பனிக்காற்று, குறைவான ஆக்சிஜன், கரடு முரடான பாதை என பல சவால்கள் நிறைந்த சைக்கிள் பயணம் இது. தினமும் 10 முதல் 12 மணி நேரம் வரை சைக்கிள் மிதித்து, 14 நாட்களில் எவரெஸ்ட்டை அடைந்திருக்கிறார் திவ்யா. மட்டுமல்ல, சில இடங்களில் சைக்கிள் கூட செல்வதற்கான பாதை இல்லை. அப்போது தனது தோளில் சைக்கிளை தூக்கிக்கொண்டு சென்றிருக்கிறார் திவ்யா. இவரது இந்தச் சாதனைக்கு நாலாப்பக்கமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தொகுப்பு: த.சக்திவேல்

Tags : Kungumam Dozhi ,Agatha Christie ,England ,
× RELATED சமூக மாற்றத்திற்கான ஒரு இளம்பெண்ணின் குரல்!