*அன்றாட செலவுக்கே அல்லாடும் தொழிலாளர்கள்
*அரசு மானிய கடனுதவி வழங்குமா என எதிர்பார்ப்பு
குளத்தூர் : குளத்தூர் பகுதியில் கோடை மழை இல்லாததால் பனைத்தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அன்றாட செலவுகளுக்கே தொழிலாளர்கள் அல்லாடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள பனைகளில் கு.சுப்பிரமணியபுரம், பெரியசாமிபுரம், குஞ்சையாபுரம், வேம்பார், கன்னிராஜபுரம், நரிப்பையூர், சாயல்குடி வரையுள்ள பனைத்தொழிலாளர்கள் பனைத்தொழில் செய்து வருகின்றனர்.
குளத்தூர் பகுதியில் உள்ள பனைகள் உயரம் குறைவாக உள்ளதால் சுமார் 200க்கும் மேற்பட்ட வெளியூர் பனைத்தொழிலாளர்கள், குளத்தூர் பகுதியில் உள்ள பனைகளை அதன் உரிமையாளர்களிடம் இருந்து கட்டுக்குத்தகைக்கு எடுத்து பனைத்தொழில் செய்கின்றனர்.
தை மாதம் பிற்பகுதியில் துவங்கும் பனைத்தொழிலில் புரட்டாசி மாதம் இறுதிவரை பனை சீவுதல், பதநீர் இறக்குதல், கருப்பட்டி காய்ச்சுதல் என தொடர்ச்சியான வேலைகள் இருக்கும். ஆனால் இந்த வருடம் துவக்கத்தில் இருந்தே பனைத்தொழில் மந்தமாகவே உள்ளது.
கோடை மழை நன்றாக பெய்தால் ஒரு நாளைக்கு சுமார் 40ல் இருந்து 50 பனை மரங்கள் வரை ஏறி தொழில் செய்யும் தொழிலாளர்கள், சுமார் 60 லிட்டர் வரை பதநீரை இறக்கி கருப்பட்டி காய்ச்சி தொழில் செய்வார்கள்.
தற்போது கோடை மழை அறவே இல்லாமல் பதநீர் உற்பத்தி குறைவாக உள்ளதால் ஒரு நாளைக்கு 20 பனை மரங்கள் ஏறியும் 5 லிட்டர் பதநீர் கிடைப்பதே அரிதாக உள்ளது. இதனால் கருப்பட்டி காய்ச்சக் கூட பதநீர் இல்லாமல் சாலையோரம் வருகின்ற பயணிகளிடம் பதநீர் விற்பனை செய்து வருகின்றனர். இந்த வருடம் வழக்கத்தை விட இன்றுவரை கோடை மழை இல்லாமல் போனதால் பதநீர் சரியான உற்பத்தி இல்லாமல் பனைகள் வறட்சியாகவே உள்ளது.
இதுகுறித்து நரிப்பையூரை சேர்ந்த பனைத்தொழிலாளர் ஆண்டி கூறுகையில், ‘நரிப்பையூர், வேம்பார், சாயல்குடி பகுதியில் பனைகள் உயரமாக இருப்பதால் தினசரி பனை ஏறி தொழில் செய்வது சிரமமாகவே உள்ளது.
இதனால் குளத்தூர் பகுதியில் உள்ள பனைகள் உயரம் குறைவாக உள்ளதால் அதன் உரிமையாளர்களிடம் கட்டுக்குத்தகைக்கு எடுத்து தொழில் செய்து வருகின்றோம். கடந்த வருடங்களை காட்டிலும் இந்த வருடம் கோடைமழை இப்பகுதியில் பொய்த்து போனது.
இதனால் பனைகளில் பதநீர் சுரப்பது வறட்சியுடன் காணப்படுகிறது. தினசரி சுமார் 50 பனைகள் வரை ஏறி குறைந்தது 50 லிட்டர் வரை பதநீர் இறக்கி விடுவோம். ஆனால் இந்த வருடம் பனைத்தொழில் படுமோசமாக உள்ளது. தினசரி 5 லிட்டர் பதநீர் கிடைப்பதே அரிதாக உள்ளது.
மேலும் குறைவான பதநீரை வைத்து கருப்பட்டி காய்ச்சுவது நஷ்டம்தான் ஏற்படும். இதனால் கிடைக்கின்ற பதநீரை சாலையில் செல்லும் பயணிகளிடம் விற்பனை செய்து அன்றாட செலவுகளை சமாளித்து வருகிறோம்.
மேலும் கருப்பட்டிக்கு இந்த வருடம் வியாபாரிகளிடம் பரவலாக விலை இருந்தாலும் கருப்பட்டி காய்ச்ச பதநீர் இல்லாமல் உள்ளது. மேலும் நலிந்துவரும் பனைத் தொழிலை காக்கும்விதமாக பனைத்தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கவும், பனைத்தொழில் செய்ய வட்டியில்லா மானிய கடன் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றார்.
