×

நஞ்சராயன் குளத்தின் நீர்மட்டம் சரிவு

*எஞ்சிய பகுதியை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை

திருப்பூர் : திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் அமைந்துள்ள நஞ்சராயன் குளம் தமிழகத்தின் 17வது பறவைகள் சரணாலயமாகவும், சுற்றியுள்ள கிராம மக்களின் விவசாய தேவையை பூர்த்தி செய்யக்கூடியதுமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போதுள்ள கடும் வெயிலின் தாக்கம் காரணமாக நஞ்சராயன் குளம் கடும் நீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. குளத்தின் பெரும்பகுதி நீரின்றி வறண்டு, மண் திட்டுகளாகக் காட்சியளிக்கிறது.

நல்லாற்று நீர்வரத்து இல்லாததால் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. மறுபுறம் எஞ்சியிருக்கும் சிறிதளவு நீரிலும் ஆகாயத்தாமரைச் செடிகள் அடர்த்தியாகப் படர்ந்து குளத்தை ஆக்கிரமித்துள்ளன. இந்த ஆக்கிரமிப்பு குளத்தின் நீர்மட்டத்தை வேகமாகக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், நீரில் ஆக்ஸிஜன் அளவையும் வெகுவாகக் குறைக்கிறது. இதனால் நீரில் வாழும் மீன்கள் உள்ளிட்ட உயிரினங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் குளத்தைச் சுற்றியுள்ள இயற்கையான பல்லுயிர் சூழலும் கேள்விக்குறியாகியுள்ளது.

குறிப்பாக, இக்குளத்திற்குப் புகலிடம் தேடி வரும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் நீரில் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதால் இரை தேடுவதில் பெரும் சிரமத்தைச் சந்திக்கின்றன. பறவைகள் நீரில் நீந்துவதற்கும், மீன் பிடிப்பதற்கும் இடமில்லாமல் போவதால் அவை மாற்று இடங்களைத் தேடிச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் கீழ் இக்குளத்திற்கு நீர் கொண்டு வரும் கட்டமைப்புகள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் தண்ணீரை கொண்டு வரவும், தற்போது நிலவி வரும் சூழலை கருத்தில் கொண்டு எஞ்சியிருக்கும் நீரைக் காக்கவும், ஆகாயத்தாமரைகளை முழுமையாக அகற்றவும் மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை, நீர்வளத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Nanjarayan Pond ,Agayathamarai ,Tiruppur ,Sarkar Periyapalayam ,Tiruppur Uthukuli Road ,Tamil Nadu ,
× RELATED கரூரில் மூதாட்டியை கொன்றவர் சென்னையில் கைது