×

வேப்பனஹள்ளியில் மழையில்லாததால் நீரின்றி வறண்டு காணப்படும் குப்தா, மார்க்கண்டேயன் நதிகள்

*10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு

கிருஷ்ணகிரி : வேப்பனஹள்ளி பகுதியில் போதிய மழையில்லாததால், குப்தா, மார்க்கண்டேயன் நதிகள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உள்ள மார்க்கண்டேயன் நதி கர்நாடக மாநிலத்தில் இருந்தும், குப்தா நதி ஆந்திரா மாநிலத்தில் இருந்தும், தமிழகத்திற்கு வேப்பனஹள்ளி வழியாக வந்து தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது.

இந்த 2 நதிகள் மூலமாக, வேப்பனஹள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட ஏரிகளும் பயன் பெறுகின்றன.

இந்த நிலையில், இரு மாநில எல்லைகளிலும், வேப்பனஹள்ளி பகுதியிலும் கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழையில்லாததால், மார்க்கண்டேயன் நதி, குப்தா நதியில் நீர்வரத்து இல்லாமல் வறண்டு, புதர்கள் மண்டி காட்சியளிக்கிறது.

தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நிலத்தடி நீர்மட்டமும் சரிந்து வருவதாக வேப்பனஹள்ளி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

கடந்த 2022ம் ஆண்டு கர்நாடக மாநிலத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பெய்த கனமழையால் மார்கண்டேயன் நதியிலும், குப்தா நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வேப்பனஹள்ளி பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட பெரிய ஏரிகள் நிரம்பி வழிந்தன. அதன் பின்னர், போதிய மழை இல்லாததால் ஆறுகளில் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.

இதையடுத்து ஆண்டுதோறும் பெய்யும் பருவமழையால் ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கர்நாடக பகுதிகளிலும், வேப்பனஹள்ளி பகுதிகளிலும் போதிய மழை இல்லாததால், நதிகள் வறண்டு பாறைகளாகவும், முட்புதர்கள் வளர்ந்தும் காணப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த மழையால், ஒரு சில இடங்களில் மட்டும் தண்ணீர் தேங்கி இருந்தது.

தற்போது கடும் வெயில் காரணமாக மார்கண்டேயன் நதியிலும், குப்தா நதியிலும் முற்றிலும் நீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. மேலும், கோடை மழை பெய்யாததால், வேப்பனஹள்ளி பகுதியில் உள்ள எட்டிப்பள்ளி ஏரி, நாச்சிகுப்பம் ஏரி, பண்ணப்பள்ளி ஏரி, ராமசந்திரம் ஏரி, சிகரமாகனப்பள்ளி ஏரி, ஜிங்களூர் ஏரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன.

இதனால் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதால், நடப்பாண்டு விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Gupta ,Markandeyan ,Veppanahalli ,Krishnagiri ,Markandeyan river ,Krishnagiri district… ,
× RELATED மாயமான காதல் ஜோடி காவல் நிலையத்தில்...