×

அரக்கோணம் யார்டில் பராமரிப்பு பணி; புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தாம்பரம்: சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு – காஞ்சிபுரம் வழித்தடம், சென்னை சென்ட்ரல் – ஆவடி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி போன்ற வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் தினசரி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், மாணவர்கள், நோயாளிகள் சென்னை வந்து செல்கின்றனர். மேற்கண்ட வழித்தடங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவ்வப்போது, பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, அரக்கோணம் – திருத்தணி வழித்தடத்தில், 21 நாட்கள் ரயில் சேவையில் முக்கிய மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே, சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
பயணிகள் பாதுகாப்பு மற்றும் ரயில் இயக்க பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, அரக்கோணம் யார்டில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையிலான பிரிவில் ஏப்ரல் 26ம் தேதி முதல் மே 16ம் தேதி வரை இரவு மற்றும் பகல் நேரங்களில் லைன் பிளாக்/ பவர் பிளாக் அமல்படுத்தப்படுகிறது.இதனால் அந்த பகுதியில் இயக்கப்படும் மெமு மற்றும் மின்சார ரயில்களின் சேவையில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.அரக்கோணம் யார்டில் ஏப்ரல் 26 முதல் மே 16 வரை 2 நேரங்களில் பணிகள் நடைபெறும். இரவு 12.45 மணி முதல் அதிகாலை 2.15 மணி வரை (1 மணி 30 நிமிடம்) மற்றும் மதியம் 12.45 மணி முதல் 1.45 மணி வரை (1 மணி நேரம்) பணிகள் நடைபெறும். இதன் காரணமாக சில ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்: ஏப்ரல் 26 முதல் மே 16 வரை பின்வரும் 2 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. திருத்தணியில் இருந்து அரக்கோணம் நோக்கி இரவு 9.15 மணிக்கு புறப்படும் ரயில் மற்றும் 11.10 மணிக்கு புறப்படும் ரயில் ரத்து செய்யப்படுகிறது. ஏப்ரல் 27 முதல் மே 17 வரை பின்வரும் 2 ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. அரக்கோணத்தில் இருந்து திருத்தணி நோக்கி அதிகாலை 4 மணிக்குப் புறப்படும் ரயில் மற்றும் 5 மணிக்கு புறப்படும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.

பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள்: ஏப்ரல் 26 முதல் மே 16 வரை 3 ரயில்களின் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மூர் மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் நோக்கி காலை 11 மணிக்கு புறப்படும் ரயில், திருவள்ளங்காடு மற்றும் அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் திருத்தணியில் இருந்து மூர் மார்க்கெட் நோக்கி 12.35 மணிக்கு புறப்படும் ரயில், திருத்தணி மற்றும் திருவள்ளங்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அடுத்தாக மூர் மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் நோக்கி இரவு 10.55 மணிக்கு புறப்படும் மெமு ரயில், திருவள்ளங்காடு மற்றும் அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

அரக்கோணம் – திருத்தணி வழித்தடம் சென்னை புறநகர் பகுதி மக்களுக்கு மிக முக்கியமானது. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயில்களைப் பயன்படுத்தி அலுவலகம், கல்லூரி மற்றும் சந்தைக்கு சென்று வருகின்றனர். இந்த மாற்றங்கள் காரணமாக அன்றாட பயணிகள் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். இதனால் மெமு மற்றும் மின்சார ரயில் பயணிகள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். தெற்கு ரயில்வே இந்த பராமரிப்பு பணிகளை விரைவாக முடித்து சேவையை இயல்பு நிலைக்குக் கொண்டு வர உறுதியுடன் உள்ளது. பயணிகள் தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ செயலி, இணையதளளம் அல்லது நிலைய அறிவிப்புகளை தொடர்ந்து கண்காணித்து பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Arakkonam Yard ,Suburban ,Southern Railway ,Thambaram ,Chennai Coast ,Chengalpattu ,Kanchipuram Road ,Chennai Central ,Avadi ,Thiruvallur ,Kummidipundi ,Chennai Wanai ,
× RELATED விழாக்கோலம் பூண்டது மதுரை: இனிதே...