- திருப்பூர் பாளையம்
- மயானம்
- Icourt
- சிபிஐ
- சென்னை
- பல்லடதா
- திருப்பூர் மாவட்டம்
- பல்லடத்
- சென்னை உயர் நீதிமன்றம்
- பல்லடம் ரோட்டரி
- பல்லடம்
சென்னை: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் மின் மயானம் அமைக்கப்பட்டதில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக விசாரணை நடத்துமாறு சி.பி.ஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சியில் மின் மயானம் அமைப்பதற்கு அதே பகுதியைச் சேர்ந்த பல்லடம் ரோட்டரி மின் மயான அறக்கட்டளையும், பல்லடம் பஞ்சாயத்து ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரியும் கடந்த 2015ல் ஒப்பந்தம் மேற்கொண்டனர். இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து, அறக்கட்டளை மின் மயான கட்டுமான பணிகளை துவக்கிய நிலையில் திட்ட ஒப்புதல் பெறவில்லை என கூறி கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், பல்லடம் நகராட்சி சார்பில் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் மின் மயானம் அமைக்க அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, டெண்டர் கோரப்பட்டு, கட்டுமான பணிகளும் முடிவடைந்து விட்டன. அறக்கட்டளை செலவில் மின் மயானம் கட்டித்தர ஒப்பந்தம் செய்த நிலையில், அரசுக்கு செலவை ஏற்படுத்தும் வகையில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி, பணிக்கம்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி, அறக்கட்டளை செயலர் அரவிந்த்பாபு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் அறக்கட்டளையுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், 25 சதவீத பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. இந்நிலையில், திடீரென பணியை நிறுத்த உத்தரவிட்டு ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் மின் மயானம் கட்டப்பட்டு உள்ளது, அதிகார துஷ்பிரயோகம், அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்திய செயல் என்பதால் இந்த விவகாரத்தில் கூட்டுச் சதி ஏறபட்டுள்ளது என்பது குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. மத்திய தணிக்கை துறையும், இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
