×

ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு வழக்கு; வீட்டு வாசலில் நின்றதால் கல்வீசி உடைத்த மூதாட்டி

சென்னை: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைப்பு வழக்கில் சிசிடிவி காட்சிகள் மூலமாக நடத்திய விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. உரிமையாளரின் வீட்டு வாசலில் இடையூறாக கார் நிறுத்தப்பட்டதால் மூதாட்டி கல்வீசி உடைத்தது சோதனையில் தெரிய வந்தது. எனவே இது அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை பாலவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் பிரபல இசையமைப்பாளர். தி.மு.க.வை ஆதரித்தும், த.வெ.க மற்றும் நடிகர் விஜய்யை விமர்சித்தும் சமூக ஊடகங்களில் பேசி வருகிறார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் மதியம் தனது காரில் கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். பின்னர் காரை ஓட்டலை அடுத்துள்ள வீட்டின் அருகே சாலையில் நிறுத்தி விட்டு சாப்பிட சென்றுவிட்டார். பின்னர் சாப்பிட்டு விட்டு மீண்டும் காருக்கு திரும்பி வந்தபோது, காரின் பின் இருக்கைக்கு இடது பக்கவாட்டில் உள்ள கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து முகநூலில் பதிவேற்றம் செய்து, ‘‘தறுதலைகளின் வேலையா அல்லது தற்குறிகளின் வேலையா? என்று தெரியவில்லை. ஒரு உணவகத்திற்கு சாப்பிட சென்றபோது நடந்தது’’ என குறிப்பிட்டிருந்தார். இதை அடுத்து கார் கண்ணாடி உடைப்பு சம்பந்தமாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து திருவான்மியூர் காவல்நிலைய போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். இது சம்பந்தமாக போலீசார் கூறுகையில், ‘‘ஜேம்ஸ் வசந்தன் ஓட்டல் அருகில் உள்ள ஒரு வீட்டு வாசலில் காரை நிறுத்தி உள்ளார். வீட்டின் உரிமையாளர் வெளியே செல்ல முடியாமல் இடையூறாக கார் நின்றது. ஆத்திரமடைந்த வீட்டில் உள்ள ஒரு மூதாட்டி கார் மீது கல்வீசி உள்ளார். இதனால் கார் கண்ணாடி உடைந்தது. ஆனால் இதில் அரசியல் பழிவாங்கலால் கார் கண்ணாடி உடைக்கப்படவில்லை என்றனர்.

Tags : James Spring ,CHENNAI ,JAMES VASANTAN ,
× RELATED சட்ட விரோதமாக மணல் பதுக்கி...