×

தமிழகத்தில் கோடை வெப்பம் உச்சம்; ஓஆர்எஸ் கரைசல் இலவசமாக வழங்க வேண்டும்: அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கோடை வெப்பம் உச்சம் அடைந்திருப்பதால் மருத்துவமனைகளில் ஓ.ஆர்.எஸ். கரைசல் இலவசமாக வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2026ம் ஆண்டின் கோடைகாலம் வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்கி, தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை, வேலூர், மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகி வருகிறது. இந்த அதீத வெப்பம் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிப்பதோடு, கடுமையான உடல்நலச் சிக்கல்களையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் வெப்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுக்க, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், சென்னை மாநகராட்சி சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய ஓஆர்எஸ் கரைசல் இருப்பில் வைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக வாங்கிக் கொள்ளலாம் என்று சுகாதாரத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

விவசாய கூலித் தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகளுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கவும், மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பொது மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் ஹீட் ஸ்ட்ரோக் (Heat Stroke) என்ற சிறப்பு வார்டு அமைக்கவும் தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. ஹீட் ஸ்ட்ரோக்கில் உயிரிழப்புகளை தடுக்க மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,ORS ,Health Department ,Chennai ,R. ,Department of Health ,Vellore ,Madurai ,Trichy ,
× RELATED ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் வழக்கறிஞரானார்