×

2026-27ம் கல்வியாண்டிற்கான 4.11 கோடி பாடநூல் அச்சிடும் பணிகள் 88 சதவீதம் நிறைவு: பள்ளிகள் திறக்கும் முதல்நாளிலே மாணவர்களுக்கு விநியோகம்

சென்னை: வரும் 2026-27ம் கல்வியாண்டிற்கான 4.11 கோடி பாடநூல்கள் அச்சிடும் பணி 88 சதவீதம் முடிவடைந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு விநியோகம் செய்யும் வகையில் கல்வித்துறை அதிகாரிகள் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகம் இணைந்து 4.11 கோடி புத்தகங்களை அச்சிட்டு விநியோகிக்கும் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. 88 சதவீத பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில் பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு புத்தகங்கள் சென்றடைய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 20 லட்சம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு தேவையான பாடநூல்களை தயாரிக்கும் பொறுப்பை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி வரும் 2026-27ம் கல்வியாண்டுக்காக மொத்தம் 4.11 கோடி பாடநூல்களை அச்சிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது 88 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்பனைக்காகவும் புத்தகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மொத்தமுள்ள 4.11 கோடி பாடநூல்களில் 2.71 கோடி புத்தகங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், 1.4 கோடி புத்தகங்கள் தனியார் பள்ளிகள் மற்றும் பொது விற்பனைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. தற்போது 1,2,3ம் வகுப்புகளை தவிர, மற்ற அனைத்து வகுப்புகளுக்கான பாடநூல்கள் அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அங்கிருத்து பள்ளிகளுக்கு புத்தகங்களை விநியோகிக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. 1,2,3ம் வகுப்புகளுக்கு நடப்பு ஆண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதால் அவற்றிற்கான புத்தகத் தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த புதிய பாடத்திட்ட புத்தகங்களும் விரைவில் அச்சிடப்பட்டு, பள்ளிகள் திறக்கப்படும் அன்றே அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிகப்படும் என்று கல்வித் துறை அதிகாரிகள் என்று தகவல் தெரிவித்துள்ளனர். இதுதவிர தனியார் பள்ளி மாணவர்களுக்கான புத்தகம் விற்பனை கடந்த ஏப்ரல் 10ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம் அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் அடையாறு பாடநூல் விற்பனை கிடங்கு ஆகிய இடங்களில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளிலேயே புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்ய கல்வித்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Chennai ,School Education Department ,Tamil Nadu… ,
× RELATED விளைச்சல் இருந்தும் விற்பனைக்கு...