×

விவசாயி மீதான துப்பாக்கிச்சூடு வழக்கை போலீசார் விசாரிக்க தடை

மதுரை: விவசாயி மீதான துப்பாக்கிச்சூடு வழக்கை போலீசார் விசாரிக்க கூடாது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம், மருதம்புத்தூரைச் சேர்ந்த பெருமாள் சேட், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எனது மகன் மணிகண்டன், பதநீர் இறக்கும் தொழிலாளி. ஏப். 7ம் தேதி ஆலங்குளம் எஸ்ஐ இசக்கிராஜா மற்றும் போலீசார் சீருடை அணியாமல் என் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அவர்கள் மணிகண்டனை பனந்தோப்பிற்கு அழைத்துச் சென்று, மரத்தில் கட்டப்பட்டுள்ள பானைகளில் கள் உள்ளதா அல்லது பதநீர் உள்ளதா என சோதிக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

மணிகண்டன் மரம் ஏறும்போது எஸ்ஐ, அவரை சாதிப் பெயரை சொல்லித் திட்டியுள்ளார். இதனை தட்டிகேட்டதற்கு எங்களையும் மிரட்டினர். மரத்திலிருந்து இறங்கி வந்து தடுத்த மணிகண்டனை, எஸ்ஐ துப்பாக்கியால் சுட்டார். இதில் மணிகண்டனின் இரு கால்களிலும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த வழக்கை தமிழ்நாடு போலீசார் விசாரித்தால், எங்களுக்கு நியாயம் கிடைக்காது. இந்த வழக்கை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்பிற்கு மாற்ற வேண்டும். தற்போதுள்ள போலீசார் இந்த வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, ‘‘இந்த வழக்கில் காவல்துறையினர் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட எஸ்ஐ ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். எனவே, இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை காவல்துறை விசாரணையைத் தொடரக்கூடாது. சிகிச்சையில் இருக்கும் மணிகண்டனை இந்த வழக்கிற்காக காவல்துறை கைது செய்யவோ அல்லது நீதிமன்றக் காவலில் வைக்கவோ கூடாது’’ என உத்தரவிட்டு விசாரணையை வரும் 28ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Tags : Madurai ,High Court ,Perumal Seth ,Maruthamputhur, Tenkasi district ,Court ,Manikandan ,
× RELATED பார்சன்ஸ்வேலி பகுதியில் ஏற்பட்டுள்ள...