×

நாங்குநேரி அருகே பரபரப்பு கிராமமே புறக்கணிப்பு 969 ஓட்டும் போச்சு…

களக்காடு: நாங்குநேரி அருகேயுள்ள பெரும்பத்து கிராமத்தில் கடந்த மார்ச் 2ம் தேதி 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதில் இருவர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக 9 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். இந்த இரட்டை கொலை விவகாரத்தில் நீதி கேட்டு பெரும்பத்து, இந்திரா காலனி கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருந்தனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

எனவே தேர்தல் நாளான நேற்று அங்கு யாரும் ஓட்டு போட வாக்குசாவடிக்கு செல்லவில்லை. பெரும்பத்து கிராமத்தில் 969 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 471, பெண்கள் 498 பேரும் அடங்குவர். தேர்தல் புறக்கணிப்பால் 969 வாக்குகளும் பதிவாகவில்லை. இதையடுத்து வாக்குச்சாவடி வெறிச்சோடியது. இதற்கிடையே வெளியூரை சேர்ந்த இருவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்து தனது வாக்கை பதிவு செய்தனர்.

இவர்கள் இருவருக்கும் எஸ்ஐஆர் பணிக்கு பின் இந்த வாக்குச்சாவடிக்கு ஓட்டு மாறி உள்ளது. அதனால் அவர்கள் தங்களது வாக்கை பதிவு செய்து விட்டு சென்றதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தேர்தல் புறக்கணிப்பை முறியடிக்க வேண்டும் என்பதற்காக வெளியூர்காரர்களை போலீசார் அழைத்து வந்து இங்கு வாக்குபதிவு செய்ததாக பெரும்பத்து கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகா குளத்துள்வாய்பட்டியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் உள்ளது. இந்த முகாமில் 44 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்காக தமிழக அரசு 40 கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளது. இந்த முகாம் வழியாக குளத்துள்வாய்பட்டி கிராமத்து விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதை உள்ளது.

இதை பயன்படுத்த முகாமை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், குளத்துள்வாய்பட்டி, குமாரகிரி புதூர், சோத்துநாயக்கன்பட்டி கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர். ஆனால், இவர்களுக்கான குளத்துள்வாய்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் 983 வாக்காளர்களில் 89 பேர் மட்டுமே வாக்களித்தனர்.

* வேங்கைவயலில் கருப்பு கொடி யாரும் வாக்களிக்கவில்லை
புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலினத்தவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் 2022 டிச.26ம் தேதி மனிதக்கழிவு கலக்கப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கு தற்போது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் நீதி கிடைக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்களையே குற்றம்சாட்டுவதாகவும் கூறி 2026 சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவை புறக்கணிக்க போவதாக சில நாட்களுக்கு முன்பிருந்தே வேங்கைவயல் மற்றும் இறையூர் கிராமத்தினர் கூறி வந்தனர்.

இந்நிலையில் இந்த பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நேற்ற காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் வேங்கைவயலை சேர்ந்த 69 வாக்காளர்களும் நேற்று மாலை வரை வாக்களிக்க வரவில்லை. குடிநீர்த்தொட்டி அமைந்துள்ள பகுதியில் கருப்பு கொடியை பறக்கவிட்டுள்ளனர். அதேநேரத்தில் இறையூர் கிராமத்தை சேர்ந்த வாக்காளர்கள் வாக்களித்தனர்.

Tags : Nanguneri ,Kalakkadu ,Perumpattu ,
× RELATED படப்பை அருகே 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பஸ்; பயணிகள் தப்பினர்