சென்னை: வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரியவகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனைக்காண, தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து கண்டுகளித்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் இருந்து விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு பெண் ஆசிய காட்டு கழுதை கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுயிருப்பதாவது: ‘குஜராத் மாநிலத்தில் உள்ள சக்கர்பாஹ் உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு பெண் ஆசிய காட்டு கழுதையை விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் வண்டலூர் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, வெள்ளை மயில் (1ஆண், 2 பெண்), சருகு மான் (2 ஆண், 2 பெண்) மற்றும் மஞ்சள் அனகோண்டா பாம்பு (பாலினம் குறிப்பிடப்படாத 2) வழங்கப்படுகின்றன. இந்த பரிமாற்றத்தின் மூலம், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவலிருந்து ஒற்றை ஆண் ஆசிய காட்டு கழுதைக்கு தற்போது பொருத்தமான இணை கிடைத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

