சென்னை: காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தங்களது வாக்கினை செலுத்தி வருகிறார்கள்.
திமுக எம்.பி-யான திருச்சி சிவா தனது வாக்கினை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்களிடம் பேசிய திருச்சி சிவா, தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம், எனவே பலரும் போட்டியிட தான் செய்வார்கள். ஆனால் தீர்ப்பளிக்க வேண்டியவர்கள் மக்கள் தான், மக்கள் எங்களுக்கு தான் வெற்றியை தருவார்கள் என்றார்.
இந்த முறை இளைஞர்களின் வாக்குகள் சிதறும், அதுவே வெற்றியை தீர்மானிப்பதில் வகிக்கும் என கூறுகிறார்களே என்ற கேள்விக்கு பதில் அளித்த திருச்சி சிவா, அப்படி இல்லை.. எங்களிடம் இருக்கும் வாக்குகள் கட்டுக்கோப்பாக இருக்கின்றன. 5 ஆண்டுகால ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் அனைவரிடத்திலும் சென்று சேர்ந்திருக்கின்றன. முதல்வரின் அறிக்கைகள், எங்களுடைய பிரச்சாரம் என எல்லாமே மக்களை ஈர்க்கின்ற அளவிற்கு இருந்தது. எனவே மிகுந்த நம்பிக்கையுடன் நாங்கள் காத்திருக்கிறோம்.
யார் எப்படி என்பதை சமுக வலைத்தளங்கள், விவாதங்கள், பொதுக்கூட்டங்கள் என பலவற்றின் வாயிலாக மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆக, மக்கள் தாங்கள் தெரிந்து வைத்துள்ள விஷயங்களின் அடிப்படையிலே யார் நம்மை ஆள வேண்டும் என எடை போட்டு பார்த்து, நிச்சயமாக நல்ல தீர்ப்பு வழங்குவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

