×

2ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்குமா?.. பாகிஸ்தான் பயணத்தை ரத்துசெய்தார் வான்ஸ்

 

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், பாகிஸ்தான் பயணத்தை ரத்துசெய்தார். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி போர் தொடங்கிய நிலையில், பாகிஸ்தானின் மத்தியஸ்த முயற்சிகளால் அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த 8ம் தேதி 2 வார கால தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதில், நிரந்தர போர் நிறுத்தத்திற்கான அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்காவும் ஈரானும் நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

அணுசக்தி திட்டம், ஹார்முஸ் ஜலசந்தி மீதான கட்டுப்பாடு போன்ற விவகாரங்களில் அமெரிக்காவின் கடுமையான நிபந்தனைகளை ஈரான் ஏற்க மறுத்தது. இதையடுத்து 2ம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்த பாகிஸ்தான் தீவிர முயற்சி மேற்கொண்டது. ஆனால், ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிட்ட அமெரிக்க கடற்படை எந்த கப்பல்களும் உள்ளே செல்லவும் வெளியேறவும் தடை விதித்தது. வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்வதற்கான முக்கிய நீர் வழிப்பாதையான பாரசீக வளைகுடாவின் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு பதிலடியாக அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

இதன் காரணமாக, ஈரான் 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்க மறுத்தது. இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், பாகிஸ்தான் பயணத்தை ரத்துசெய்தார். ஈரானுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் செல்ல ஜே.டி.வான்ஸ் திட்டமிட்டிருந்தார். 2ம் கட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக ஈரானிடம் இருந்து பதில் வராத நிலையில் பயணத்தை ரத்துசெய்தார். அமெரிக்கா – ஈரான் இடையே 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்குமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Tags : Vance ,Pakistan ,Washington ,U.S. ,Vice President ,J. D. Vance ,United ,States ,Israel ,Iran ,
× RELATED அடுத்தடுத்து வெடித்த 2 சிலிண்டர்கள்.....