மீனம்பாக்கம்: தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 234 தொகுதிகளிலும் நாளை (23ம் தேதி) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்களிக்க வசதியாக அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள், தங்களின் வாக்குகளைப் பதிவு செய்வதற்காக, நேற்றிரவு முதல் கார், பேருந்து, ரயில்களில் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றனர். இதில் பலபேருக்கு ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காததால், விமானங்களில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சென்னை விமானநிலையத்தில் இருந்து தமிழ்நாட்டின் தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் செல்லும் விமானங்களில் இன்று அதிகாலை முதல் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேற்கண்ட ஊர்களுக்கு செல்லும் பல்வேறு விமானங்களில் பலருக்கு டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை. இதனால் ஒருசில விமானங்களில் இருக்கும் சொற்ப விமான டிக்கெட்டுகளுக்கு பயணிகளிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இதையடுத்து, அந்த விமான டிக்கெட்டுகளுக்கான கட்டணங்கள் கிடுகிடுவென பலமடங்கு அதிகரித்து வருகிறது. இதனால் டிக்கெட்டுக்காக காத்திருக்கும் ஏராளமான பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வழக்கமான கட்டணம் ரூ.5,354. இன்றைய கட்டணம் ரூ.17,527. பெங்களூர் வழியாக தூத்துக்குடிக்கு செல்ல கட்டணம் ரூ.17,716. சென்னையில் இருந்து மதுரைக்கு வழக்கமான கட்டணம் ரூ.6,670. இன்று வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.13,320. பெங்களூர் வழியாக மதுரைக்கு செல்ல ரூ.29,397 செலுத்த வேண்டும். சென்னையில் இருந்து திருச்சிக்கு வழக்கமான கட்டணம் ரூ.3,677. இன்றைய கட்டணம் ரூ.14,237. சென்னையில் இருந்து கோவைக்கு வழக்கமான கட்டணம் ரூ.4,634. இன்று ரூ.16,339. சென்னையில் இருந்து சேலத்துக்கு வழக்கமான கட்டணம் ரூ.3,319. இன்று ரூ.12,027 என்று கூறப்படுகிறது.
இவ்வாறு விமான டிக்கெட் கட்டணங்கள் பலமடங்கு அதிகரித்துள்ளது. எனினும், தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்குகளை பதிவு செய்திட வேண்டும் என்ற ஆர்வத்தில் பயணிகளில் பலர் விமான டிக்கெட் கட்டண அதிகரிப்பு குறித்து கவலைப்படாமல் போட்டி போட்டு டிக்கெட் முன்பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி பயணித்து வருகின்றனர். இதனால் பெரும்பாலான விமானங்களில் டிக்கெட் இல்லாத நிலையால் ஏராளமான பயணிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதில் பலர், எப்படியேனும் இன்றிரவுக்குள் தென்மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு சென்றுவிட வேண்டும். இதற்காக ஏதேனும் சிறப்பு விமானங்கள் விடுவார்களா என்ற ஆர்வத்திலும் காத்திருக்கின்றனர். இதனால் சென்னை விமானநிலையத்தில் பயணிகளிடையே பெரும் பரபரப்பு நிலவுகிறது.
