- ராகுல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஸ்ரீ முஹம்மதூர்
- சென்னை
- காங்கிரஸ் கட்சி
- வருமானவரித் துறை
- ஸ்ரீபிரஹுமுதூர்
- ராகுல் காந்தி
- காங்கிரஸ்
சென்னை: பிரசாரத்திற்கு ராகுல் காந்தி நேற்று காலை தமிழகம் வந்த நிலையில், ‘சோதனை என்ற போர்வையில்’ ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குள் என்னை சட்டவிரோதமாக சிறை பிடித்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் மீது காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் அவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர்களுக்கு பணம் பட்டுவாடா நடப்பதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தது. அதை தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் செல்வப்பெருந்தகை வசித்து வரும் மணிமங்கலம் பகுதியில் உள்ள வீட்டிற்கு நேற்று அதிகாலை 6 வாகனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர்.
பிறகு செல்வப்பெருந்தகை வீட்டின் மாடி மீது ஏறியும், சுற்றியுள்ள பகுதிகளிலும் நோட்டமிட்டு பணம் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் இருந்த செல்வப்பெருந்தகை தமிழகம் வரும் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ராகுல் காந்தியை, மாநில தலைவர் என்ற முறையில் நேரில் அழைக்க திருவனந்தபுரம் செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்தார். உள்ளே செல்வப்பெருந்தகை இருப்பதை அறிந்த வருமான வரித்துறை அதிகாரிகள் உடனே வீட்டின் அருகே உள்ள கோயில் முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு கோயிலுக்குள் சென்று காத்திருந்தனர்.
விமான நிலையத்திற்கு செல்ல நேரம் ஆனதால் செல்வப்பெருந்தகை தனது வீட்டில் இருந்து புறப்படுவதற்கு முன்பு தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘ராகுல்காந்தி ஒரு முக்கிய தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வதற்காக இன்று (நேற்று) தமிழகம் வந்துள்ள நிலையில், வருமான வரித்துறையினர், இந்தி பேசும் அதிகாரிகளுடன் சேர்ந்து, ‘சோதனை என்ற போர்வையில்’ ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குள் என்னை சட்டவிரோதமாக சிறை பிடித்து, எனது அரசியல் கடமைகளை ஆற்றுவதிலிருந்தும் மக்களுடன் கலந்துரையாடுவதிலிருந்தும் திறம்பட தடுத்துள்ளனர்.
அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன். ஜனநாயக குரல்களை ஒடுக்கும் இதுபோன்ற முயற்சிகளுக்கு எதிராக உறுதியான நிற்பேன்’ என கூறியிருந்தார். இந்த பதிவு சிறிது நேரத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு உயர் அதிகாரிகளிடம் இருந்து அங்கிருந்து புறப்பட்டு வர வேண்டும் என்று செல்போன் மூலம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் 6 வாகனங்களில் ஏறி அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
* முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ தள பக்கத்தில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பரப்புரையை முடக்க நினைக்கும் சதிக்கு கடும் கண்டனம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை மறந்து, தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் 48 மணி நேரம் கூட இல்லாத நிலையில், எதிர்க்கட்சியினரை முடக்க, தோல்வி பயத்தில் ஒன்றிய பா.ஜக அரசு செய்து கொண்டிருக்கும் அட்டூழியத்திற்கு தமிழ்நாடு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
