×

சோழிங்கநல்லூர், வேளச்சேரி, சைதாப்பேட்டையில் காலை முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர பரப்புரை

 

சென்னை: சோழிங்கநல்லூர், வேளச்சேரி, சைதாப்பேட்டையில் காலை முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற 23ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனால், அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இறுதிக்கட்ட பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் 6 கட்டங்களாக பிரசாரத்தில் ஈடுபட்டார். கடைசியாக நேற்று முன்தினம் ஓசூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல்வர் சென்னை திரும்பினார்.

சென்னை திரும்பிய கையோடு, சென்னையில் பிரசாரம் மேற்கொள்ள தொடங்கினார். அதாவது நேற்று முன்தினம் இரவு அவர் மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு மற்றும் தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். ரோடு ஷோவிலும் ஈடுபட்டார். நேற்று காலையில் சென்னை அண்ணா நகர் தொகுதி திமுக வேட்பாளர் சிற்றரசுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். இந்நிலையில், இன்று சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அவர் கண்ணகி நகர் பகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து வேளச்சேரி காந்தி சாலையில் நடந்து சென்று காங்கிரஸ் வேட்பாளர் அசன் மௌலானாவுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரித்து வருகிறார். அதனை தொடர்ந்து சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

Tags : Chozhinganallur ,Velacheri ,Saithappetta ,K. Stalin ,Chennai ,Chozhinanganallur ,Ph. ,Tamil Nadu Legislative Assembly elections ,
× RELATED 10க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில்...