×

தமிழகம் முழுவதும் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது: நாளை மறுதினம் வாக்குப்பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதையடுத்து அனைத்துக்கட்சி தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் இறங்கி உள்ளனர். நாளை மறுதினம் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி (நாளை மறுதினம்) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15ம் தேதி அறிவித்தது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற்றது.

ஏப்ரல் 9ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவி வருகிறது. இந்த முறை 100 சதவீத வாக்குப்பதிவை எட்டுவதற்கு தேர்தல் ஆணையம் அனைத்து விழிப்புணர்வு பிரசாரங்களையும் முன்னெடுத்துள்ளது. தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால், அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிக்கட்ட சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் வீதி, வீதியாக பிரசாரம் நடந்து வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய், நட்சத்திர பேச்சாளர்கள், வேட்பாளர்கள் கடந்த ஒரு மாதமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜ தேசிய தலைவர் நவீன், ஒன்றிய அமைச்சர்கள் என பலரும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் பிரசாரம் செய்தார். இன்று, தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். அதேபோல் எடப்பாடி பழனிசாமி சேலம் எடப்பாடி தொகுதியிலும், சீமான் காரைக்குடியிலும், விஜய் சென்னை நந்தனத்திலும் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்கள். இன்று (21ம் தேதி) மாலை 6 மணியுடன் அனைத்துக்கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் பிரசாரம் செய்வதை நிறுத்திவிட வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக்கூடாது.

வீடு வீடாக சென்று வேட்பாளர்கள், தலைவர்கள் வாக்கு கேட்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் இன்று மாலை 6 மணியுடன் தொகுதியை காலி செய்துவிட்டு வெளியேறி விட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து தங்கும் விடுதிகள், கல்யாண மண்டபங்களில் போலீசார் சோதனை நடத்தி சம்பந்தம் இல்லாத நபர்களை தொகுதியை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து நாளை மறுதினம் (23ம் தேதி) தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதியிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணி வரை இடைவேளை இல்லாமல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து, தயார் நிலையில் வைத்துள்ளது. 23ம் தேதி காலை வாக்குப்பதிவு தொடங்குவதையொட்டி நாளை (22ம் தேதி) மதியத்திற்கு மேல் தமிழகத்தில் மொத்தமுள்ள 75,064 வாக்குச்சாவடி மையங்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஒவ்வொரு தொகுதிகளுக்கு என தனித்தனியாக நியமிக்கப்பட்டுள்ள மண்டல குழுவினர் கொண்டு வந்து, அந்தந்த வாக்குப்பதிவு மையங்களில் பொருத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.

வாக்குப்பதிவு நாள் அன்று பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் விவி-பேட் இயந்திரங்களில் வேட்பாளரின் பெயர், படம், சின்னம் பொருத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் மட்டும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் என சுமார் 4.25 லட்சம் பேர் ஈடுபட உள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 350 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் (சுமார் 32 ஆயிரம்) தமிழகம் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 22ம் தேதி மாலைக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு வந்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகள் மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் துணை ராணுவ வீரர்கள் மற்றும் அதிக போலீசார் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். சுமார் 50 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, நேரடியாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் இண்டர்மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவுகள் அனைத்தும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்படும். தமிழகத்தில் நாளை மறுதினம் பதிவாகும் வாக்குகள் (வாக்குப்பதிவு இயந்திரங்கள்) அனைத்தும் அன்றைய தினம் இரவு வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டாங்க் ரூமில் வைக்கப்படும். இதை தொடர்ந்து 10 நாட்கள் இடைவெளிக்கு பிறகு, மே 4ம் தேதி (திங்கள்) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அன்றைய தினம் காலை 9 மணிக்கு முதல் சுற்று முடிவு மற்றும் முன்னணி நிலவரம் தெரியவரும்.

* 14,59,039 புதிய வாக்காளர்கள்
தமிழகத்தில் மொத்தமாக 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேரும், பெண்கள் 2 கோடியே 93 லட்சத்து 04 ஆயிரத்து 905 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7 ஆயிரத்து 728 பேரும் உள்ளனர். இந்த சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்ககூடியவர்கள் அதாவது 18 முதல் 19 வயதுடைய புதிய வாக்காளர்கள் 14 லட்சத்து 59 ஆயிரத்து 039 பேர் உள்ளனர். இந்த தேர்தலில், இவர்களின் வாக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வாக்காளர்கள் எந்த வாக்குப்பதிவு மையத்தில் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து, வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் வீடு வீடாக பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 79 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குறைந்தபட்சமாக அம்பாசமுத்திரத்தில் 5 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்கள் யாரும் போட்டியிடவில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்தால் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பை மீறி...