×

கோடை வெயிலின் தாக்கம் நீர்நிலைகளில் குவியும் சுற்றுலா பயணிகள்

ஆண்டிபட்டி : கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க, வைகை அணை உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இந்த வைகை அணைப் பகுதியில் வலது கரை, இடது கரை எனப் பிரிக்கப்பட்டு இரண்டு பூங்காக்கள் அமைந்துள்ளன.

இந்த பூங்கா தேனி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலாத்தளமாக விளங்கி வருகிறது. வைகை அணை பூங்காவில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காவிற்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். பூங்காவில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள்.

வைகை அணை பூங்காவிற்கு குடும்பத்துடன் சென்று வருவதற்கும், குழந்தைகள் குஷியாக விளையாடுவதற்கும் ஏற்ற இடமாக உள்ளது. அணையின் இரண்டு புறங்களும் உள்ள பூங்காக்களில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளது.

சிறுவர்கள் மகிழ்ந்து விளையாடுவதற்கு சிறுவர் பூங்கா, பெரியார் மாதிரி வைகை பூங்கா, மச்சக்கன்னி பூங்கா, பயில்வான் பார்க், யானை சறுக்கல், ஊஞ்சல், மலைகள் போல் அமைக்கப்பட்டு வரைபடங்கள், நீரூற்றுகள், புல் தரைகள், ஆங்காங்கே ஓய்விடங்கள், குழந்தைகள் குஷியாக சென்று வர உல்லாச ரயில், படகு குழாம், இசையுடன் தண்ணீர் நடனமாடும் வகையில் அமைக்கப்பட்டு இசை நடன நீரூற்று என ஏராளமான அம்சங்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்கவும், வார விடுமுறையையொட்டியும் நேற்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வைகை அணை பூங்காவில் குவிந்தனர்.

சிறுவர் பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சல், சறுக்குகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் ஏறி மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர். வைகை அணை பூங்கா உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளில் நேற்று சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் குவிந்தனர்.

Tags : Andipatti ,Vaigai Dam ,
× RELATED ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு சித்தாந்தம் என...