×

ஊட்டி, குன்னூர், கூடலூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகள் சரியாக உள்ளதா? மண்டல அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்

*கலெக்டர் அறிவுரை

ஊட்டி : வாக்குசாவடிகளை நேரில் ஆய்வு செய்து, அனைத்தும் சரியான முறையில் உள்ளதா என்பதை மண்டல அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குபதிவு வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தேர்தலை சுமூகமாக நடத்தி முடிக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தேர்தல் பணியில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கு இரண்டு கட்ட பயிற்சிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னங்கள் பதிவு செய்யும் பணிகள் முடிக்கப்பட்டு அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளிலும் மண்டல அலுவலர்கள் வாக்குப்பதிவு மற்றும் வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான கூட்டம் நடந்தது.

ஊட்டி ஆர்டிஒ அலுவலகம், கூடலூர் ஆர்டிஒ அலுவலகம்,குன்னூர் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் நடந்தது. இக்கூட்டத்தில் ஊட்டி தொகுதியில் பணியாற்றும் 31 பேர், கூடலூர் மற்றும் குன்னூர் தொகுதிகளில் பணியாற்றும் தலா 26 பேர் என மொத்தம் 83 மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில், கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு பங்கேற்று பேசுகையில், ‘‘மண்டல அலுவலர்கள் தங்களுக்கு உண்டான வாக்குச்சாவடிகளை நேரில் ஆய்வு செய்து, அனைத்தும் சரியான முறையில் உள்ளதா? என உறுதி செய்ய வேண்டும்.

மேலும், நாளை(இன்று) நடைபெறும் பயிற்சியில் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாத வகையில் வாக்குப்பதிவு நாளன்று பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் தேவையான பயிற்சி அளிக்க வேண்டும். மாதிரி வாக்குப்பதிவுகள் மேற்கொண்ட பிறகு அதனை தவறாமல் அளிக்க வேண்டும் என்பதை அவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.

தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள படி தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று பதற்றமின்றி பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்’’ என்றார். இக்கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சங்கீதா, டினு அரவிந்த், குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ooty ,Coonoor ,Gudalur ,Tamil Nadu ,Assembly ,
× RELATED தமிழ் இனத்தின் துரோகிகளை விரட்டி...