×

ஊட்டி சின்னகாடிமந்து பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்

*பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை

ஊட்டி : ஊட்டி அருகே உள்ள சின்னகாடி மந்து பகுதியில் விவசாய நிலங்களில் காட்டு யானைகள் முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட மசினகுடி,ஆனைகட்டி,சிங்காரா,பொக்காபுரம் போன்ற பகுதிகளில் சிறுத்தை, புலி, கரடி, காட்டு மாடு, யானை போன்ற வன விலங்குகள் அதிகளவில் உள்ளன.

ஆண்டுதோறும் நவம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை கடும் உறைபனி காணப்படும். இச்சமயங்களில் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள சிறு செடி கொடி முதல் மரங்கள் வரை அனைத்தும் காய்ந்து போகும். தொடர்ந்து பிப்ரவரி மாதம் முதல் கடும் வெயில் வாட்டி வதைப்பதால் வனப்பகுதிக்குள் உள்ள நீரோடைகள், குளங்கள் தண்ணீர் இன்றி காணப்படும்.

இதுபோன்ற சமயங்களில் உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் வனவிலங்குகள் நீர் நிலைகளை தேடி இடம் பெயர்வது வாடிக்கை.குறிப்பாக, இவைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி மக்கள் வாழும் பகுதிக்குள் புகுந்து மனிதர்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், மசனகுடி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானைகள் உணவு தேடி கல்லட்டி வழியாக சோலூர், தலைகுந்தா பகுதிக்கு வந்துள்ளன.

பின்னர்,அங்கிருந்து சின்ன காடிமந்து பகுதியில் உள்ள விவசாயநிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கேரட் உட்பட மலை காய்கறிகள் சேதமடைந்துள்ளன.

இதனால், அப்பகுதி விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.விவசாய நிலங்களை துவம்சம் செய்யும் காட்டு யானைகளை விரட்ட வலியுறுத்தி தொடர்ந்து தோடர் பழங்குடியின மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கலெக்டரிடம் மனு அளித்தனர். மேலும், போராட்டங்களையும் நடத்தினர். எனவே, சின்னகாடிமந்து பகுதியில் விவசாய நிலங்களை துவம்சம் செய்யும் காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chinnakadi Mandhu ,Ooty ,
× RELATED தமிழ் இனத்தின் துரோகிகளை விரட்டி...