×

தேர்தல் பாதுகாப்பு பணியின் போது ஒவ்வொரு காவலரும் பொறுப்புணர்வோடு கடமையாற்றிட வேண்டும்

பெரம்பலூர், ஏப். 19: ஒவ்வொரு காவலரும் பொறுப்புணர்வோடு பணியாற்ற வேண்டும், உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த வாராந்திர கவாத்து பயிற்சியில் கலந்து கொண்ட போலீசாருக்கு, எஸ்பி பிரபாகர் அறிவுறுத்தி உள்ளார். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி பிரபாகர் தலைமையில் நேற்று மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படைக் காவலர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெற்றது.

இதில் காவலர்களுக்கு உடற்பயிற்சி, கவாத்து பயிற்சி மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும் வரும் தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளில் காவலர்கள் சிறப்பாக பணி புரிவது குறித்தும் மாவட்ட எஸ்பி பிரபாகர் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். மேலும் இந்தக் கவாத்துப் பயிற்சியில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட எஸ்பி பிரபாகர் காவல்துறையில் பணியாற்றும் ஒவ்வொரு காவலரும் பொறுப்புணர்வோடு பணியாற்ற வேண்டும், உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

மேலும் காவலர்களின் குறைகளை கேட்டறிந்த எஸ்பி பிரபாகர் விரைந்து அதனை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கூறினார். இந்த கவாத்து பயிற்சியில் மாவட்ட ஏடிஎஸ்பி (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) பால முருகன், பெரம்பலூர் உட்கோட்ட டிஎஸ்பி ரவிச் சந்திரன், ஆயுதப்படை டிஎஸ்பி சுப்பையன், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், போலீசார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Tags : Perambalur ,SP ,Prabhakar ,Perambalur Armed Forces Ground ,Perambalur District… ,
× RELATED சிலுவைச்சேரி அரசு தொடக்கப்பள்ளியில்...