கவுகாத்தி: அசாமில் 126 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் கடந்த 9ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. வாக்குகள் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள ஸ்ட்ராங் ரூம்களில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. இந்நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரான தேபப்ரதா சைகியா, தேர்தல் பார்வையாளர் நரசிம்மகுரி டிஎல் ரெட்டிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் டெமோவ், சிவசாகர், நசிரா ஆகிய 3 தொகுதிகளில் வாக்கு இயந்திரம் உள்ளிட்ட தேர்தல் ஆவணங்கள் பாதுகாக்கப்படும் அறையில் தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட முக்கிய வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என புகைப்பட ஆதாரங்களுடன் புகார் கூறி உள்ளார். பாதுகாப்பு அறைகளில் ஒரு நுழைவாயில் மட்டுமே இருக்க வேண்டுமென தேர்தல் ஆணைய விதிமுறை கூறப்பட்டுள்ள நிலையில், 2 கதவுகள் கொண்ட அறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அதிலும் ஒரு கதவில் மட்டுமே பூட்டு போட்டு சீலிப்பட்டிருப்பதாகவும் மற்றொரு கதவும் வெறுமனே உட்புறமாக தாழிடப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் சைகியா குற்றம்சாட்டி உள்ளார்.
