×

நீண்ட தாமதத்திற்குப் பின் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% அதிகரிப்பு: அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படியை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நீண்ட தாமதத்திற்குப் பின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில் ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டிற்கு 2 முறை அகவிலைப்படி திருத்தி அறிவிக்கப்படும். பொதுவாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இந்த அறிவிப்பு வெளியாகும். கடந்த சில ஆண்டுகளாக அகவிலைப்படி அறிவிப்பில் பெரிய அளவில் தாமதம் ஏற்படாத நிலையில், கடந்த ஜனவரியில் இருந்து அகவிலைப்படி தொடர்பாக ஒன்றிய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. கடந்த மார்ச் மாதமே அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏப்ரல் மாதமாகியும் அறிவிக்கப்படாததால் ஒன்றிய அரசு ஊழியர்கள் போராட்டத்தை தொடங்க திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்துவதாக ஒன்றிய அமைச்சரவை நேற்று அறிவித்தது. பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இது குறித்து கூட்டத்திற்கு பின், ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டியில், ‘‘ஒன்றிய அரசு ஊழியர்கள் 50.46 லட்சம் பேரும், ஓய்வூதியதாரர்கள் 68.27 லட்சம் பேரும் பயனடையும் வகையில் அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) 2 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அடிப்படை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்த்தில் தற்போதுள்ள 58 சதவீதத்தை 60 சதவீதமாக உயர்த்தும். இந்த உயர்வினால் அரசு கருவூலத்திற்கு ஆண்டுக்கு ரூ.6,791.24 கோடி கூடுதல் செலவாகும். அகவிலைப்படி கடந்த ஜனவரி 1ம் தேதியிட்டு அமல்படுத்தப்படும்’’ என்றார்.

* ரூ.12,980 கோடியில் கடல்சார் காப்பீடு
ராணுவ உத்தரவாதத்துடன், இந்திய கொடியிடப்பட்ட அல்லது இந்திய கட்டுப்பாட்டில் உள்ள கப்பல்கள் அல்லது இந்தியாவிற்கு வரும் அல்லது இந்தியாவிலிருந்து புறப்படும் கப்பல்களுக்காக, ரூ.12,980 கோடியில் பாரத் கடல்சார் காப்பீட்டுக் குழுமம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்தியா சார்ந்த கப்பல்களுக்கு மலிவு விலையில் உள்நாட்டு காப்பீடு கிடைப்பதை உறுதி செய்வதோடு பாதுகாப்பையும் அதிகரிக்கும் என ஒன்றிய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

* ரூ.24,815 கோடியில் 2 ரயில்வே திட்டம்
ரூ.24,815 கோடியில் 2 ரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் காஜியாபாத்தில் இருந்து சீதாபூர் வரை 3ம் மற்றும் 4வது வழித்தடம் ரூ.14,926 கோடியிலும், ராஜமுந்திரியில் இருந்து விசாகப்பட்டினம் வரை 3வது மற்றும் 4வது வழித்தடம் ரூ.9,889 கோடியிலும் அமைக்கப்படும். இத்திட்டங்கள் உபி மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த 15 மாவட்டங்களுக்கு பலனளிக்கும். இதுதவிர கிராமப்புற உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், பிரதமர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தை 2028ம் ஆண்டு வரை நீட்டிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக ரூ.3000 கோடி ஒதுக்கப்படும்.

Tags : Union government ,New Delhi ,Cabinet ,
× RELATED ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற...