×

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியுடன் நாடாளுமன்ற இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு: பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு

புதுடெல்லி: தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28ம் தேதி தொடங்கியது. முதல் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒன்றிய பொது பட்ஜெட், மானிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. கடந்த மார்ச் 9ம் தேதி தொடங்கிய 2வது பட்ஜெட் கூட்டத்தொடர், ஏப்ரல் 2ம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற ஏப்ரல் 16 முதல் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இதன்படி, மக்களவையில் கடந்த 16ம் தேதி நடந்த சிறப்பு அமர்வில் 2029ல் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும், மக்களவை இடங்களை 543ல் இருந்து 816 ஆக அதிகரிக்கவும் வகை செய்யும் அரசியலமைப்பு 131வது திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் இந்த மசோதா நேற்று முன்தினம் தோல்வி அடைந்தது. மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்த முதல் மசோதா இது. இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும் சபாநாயகர் ஓம்பிர்லா நிறைவுரையை வாசித்தார்.

அதில், பட்ஜெட் கூட்டத்தொடர் சுமார் 151 மணி நேரம் 42 நிமிடங்கள் நீடித்ததாகவும், 31 அமர்வுகள் நடைபெற்றதாகவும் சபாநாயகர் பிர்லா தெரிவித்தார். இத்தொடரின் போது அவையின் செயல் திறன் 93 சதவீதமாக இருந்தது. இதைத் தொடர்ந்து அவர் அவையை காலவரையின்றி ஒத்திவைத்தார். கூட்டத்தொடரின் நிறைவாக, முதல் முறையாக வந்தே மாதரம் தேச பாடலின் 6 சரணங்களும் முழுமையாக இசைக்கப்பட்டது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையிலேயே தோல்வி அடைந்து விட்டதால் மாநிலங்களவையில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. எனவே மாநிலங்களவை நேற்று காலை கூடியதும் அவைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைத்தார். இக்கூட்டத்தொடரில் மாநிலங்களவை 110 சதவீதம் என்ற குறிப்பிடத்தக்க அளவிலான செயல்திறனை எட்டியதாக கூறிய அவர், உறுப்பினர்களின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.

Tags : Houses of Parliament ,Budget Session ,New Delhi ,Budget Session of Parliament ,Union General… ,
× RELATED ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற...