×

கர்நாடகாவில் கார் – பஸ் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து 6 பேர் உடல் கருகி பலி

கர்நாடக மாநிலம் யாத்கிரில் கார் தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். அந்தக் கார் யாத்கிரிலிருந்து ராய்ச்சூருக்குச் சென்று கொண்டிருந்தது. மொத்தமாக, 3 குழந்தைகள் உட்பட 8 பேர் அந்தக் காரில் பயணித்துக்கொண்டிருந்தனர். பெங்களூருவில் இருந்து கலபுரகி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்து மீது மோதியதில் கார் தீப்பிழம்பாக மாறி, முற்றிலுமாகச் சாம்பலானது.

தீயணைப்பு மற்றும் அவசர கால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் காரில் வந்த 6 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலே பலியானார்கள். 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்கள் உரிய நேரத்தில் மீட்கப்பட்டதாகவும் காவல் கண்காணிப்பாளர் பிருத்விக் சங்கர் கூறினார்.

அதிவேகம் மற்றும் ஓட்டுநரின் கவனக்குறைவே இந்த விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பாகக் காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் விபத்தில் பலியானவர்களை அடையாளம் காண அவர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

Tags : Karnataka ,Yathgir ,Yatgir ,Rayshur ,Bangalore ,Kalapuragi ,
× RELATED இந்தியாவின் மக்கள் வேறு, பாஜக வேறு;...