- கேரள அரசு
- சிலாந்தி நதி
- உச்ச நீதிமன்றம்
- தெற்கு மண்டல பசுமை தீர்ப்பாயம்
- தமிழ்நாடு அரசு
- புது தில்லி
- பசுமை தீர்ப்பாயம்
- அமராவதி நதி
- வட்டவாடா பஞ்சாயத்து
- இடுகி மாவட்டம்
- தமிழ்நாடு-கேரளா
புதுடெல்லி: அமராவதி ஆற்றின் கிளை ஆறான சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு செக் டேம் கட்டுவதற்கு எதிராக பசுமை தீர்ப்பாயம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழக – கேரள எல்லையோர கிராமமான இடுக்கி மாவட்டம் வட்டவடா பஞ்சாயத்தில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின் கீழ் சிலந்தியாற்றின் குறுக்கே செக் டேம் கட்டும் பணியை கேரள அரசு தொடங்கியது. இந்த சிலந்தியாறு தமிழகத்தின் அமராவதி ஆற்றின் முக்கிய கிளை ஆறாகும். கேரளா அரசு தடுப்பணை கட்டுவதால் தமிழகத்தில் பாசன வசதி பாதிக்கப்படும் என கடந்த 2024ம் ஆண்டு மே 24ம் தேதி வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. காவிரி நீர் பகிர்வு தொடர்பான தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி இப்பிரச்னையை சுமூகமாக தீர்க்குமாறு இரு மாநிலங்களுக்கும் பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியது. மேலும், உரிய அனுமதியின்றி பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் உத்தரவிட்டது.
பசுமை தீர்ப்பாயத்தின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜெய்மால்யா பக்சி மற்றும் விபுல் பாஞ்சாலி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது கேரள அரசு தரப்பில் மூத்த வக்கீல் ஜெய்தீப் குப்தா ஆஜராகி வாதிட்டார். ‘அரசியலமைப்பு சட்டம் 262 மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் விவகார சட்டத்தின்படி, இரு மாநில நதிநீர் பிரச்னைகளை பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க அதிகாரம் இல்லை. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கேரளாவிற்கு ஒதுக்கப்பட்ட பம்பார் வடிநிலப் பகுதியில் தான் இந்த சிறிய தடுப்பணை கட்டப்படுகிறது’ என்று அவர் வாதிட்டார்.
கேரள அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் ஆணையிட்டனர். முன்னதாக பசுமை தீர்ப்பாயத்தில் கேரள அரசு தாக்கல் செய்த பதிலில், ‘வட்டவடா பஞ்சாயத்து மக்களுக்கு குடிநீர் வழங்கவே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது பெரிய அணை அல்ல, சிறிய தடுப்பணை மட்டுமே. காவிரி நீர் பகிர்வு தீர்ப்பின்படி கேரளாவிற்கு வழங்கப்பட்ட நீரின் அளவிலேயே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
