×

திராவிட மாடல், அடிமை மாடல், சினிமா மாடலுக்கான தேர்தல் இது: நடிகர் பிரகாஷ் ராஜ் அறைகூவல்

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் என். பாண்டியை ஆதரித்து, திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, நாட்டுக்கும் மக்களுக்கும் பிரச்சனை வரும்போது ஓடி வருவது ஒரு கலைஞனின் கடமை. அந்த அடிப்படையில் ஒரு வாக்காளனாக உங்களிடம் பேச வந்துள்ளேன். சாமி சிலையை திருடும் கும்பலை பார்த்திருப்போம். ஆனால் சாமியை திருடும் கும்பல் தற்போது வந்துள்ளது. இந்தத் தேர்தலை மூன்று மாடல்களுக்கான தேர்தலாகப் பார்க்க வேண்டும். ஒன்று கல்வி மற்றும் மொழியைக் காக்கும் திராவிட மாடல். இந்தியாவிலேயே ஒரு மாநிலம் இப்படி இருக்க வேண்டும் என பெருமையை சேர்த்தது. மொழி மானத்தை காப்பாற்றியது. தற்போது இன மானத்தை காப்பாற்ற போராடுகிறது. இரண்டாவது தன்மானத்தை அடகு வைக்கும் அடிமை மாடல். மூன்றாவது ஒரே நாளில் முதல்வர் ஆகத் துடிக்கும் சினிமா மாடல்.

பாஜக சொல்வது டபுள் இன்ஜின் சர்க்கார் அல்ல, அது வெறும் டப்பா சர்க்கார். தமிழ்நாட்டிற்குள் பாஜக என்கிற பாம்பைத் தங்களின் சுயநலத்திற்காக அதிமுகவினர் உள்ளே இழுத்து வருகிறார்கள். தன்மானத்தைத் தூக்கிக் கொண்டு போய் மோடியின் காலடியில் வைக்கும் அடிமை மாடல் நமக்குத் தேவையா? தமிழ்நாடு ஒரு கிணறு போன்றது. அதில் தவளைகளாகிய நாம் நிம்மதியாக வாழ்ந்தோம். ஆனால், பதவி ஆசை பிடித்த எடப்பாடி பழனிசாமி போன்ற ஒரு தவளை, வெளியே சென்று ‘பிஜேபி’ என்கிற பாம்பைத் தமிழ்நாட்டிற்குள் அழைத்து வருகிறது. அந்தப் பாம்பு உள்ளே வந்தால் மற்ற தவளைகளை மட்டுமல்ல, அந்தப் பாம்பைத் தூக்கி வந்த தவளையையும் சேர்த்து விழுங்கிவிடும். இப்படித் தன்மானத்தை மோடியின் காலடியில் அடகு வைப்பதுதான் ‘அடிமை மாடல்’.

சினிமா மாடல் என்றால் சினிமாவில் டாக்டர் ஆகலாம், இன்ஜினியர் ஆகலாம். ஏன் முதல்-அமைச்சர் கூட ஆகலாம். அரசியலில் வந்த உடனே முதல்-அமைச்சராக முடியுமா?நிஜ அரசியலில் அப்படி ஆக முடியாது. தமிழ்நாட்டின் மொழி, இனம் எனப் பிரச்சனை வந்தபோது நீங்கள் எங்கே இருந்தீர்கள்? மக்கள் காட்டும் அன்பைத் தப்பா பயன்படுத்தாதீர்கள். நடிகனைப் பிடித்தால் தொண்டையில் விரலை விட்டு விசில் அடிக்கலாம், ஆனால் நாட்டை கொடுத்துவிடக் கூடாது.

தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவின் மூலம், தென்னிந்தியாவின் அரசியல் அதிகாரத்தைப் பறிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுகிறது. பெரும்பான்மையை வைத்து எதையும் தீர்மானிக்க நினைத்தால் அது ஜனநாயகத்திற்கு ஆபத்து. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மாற்றினால் தென்னிந்தியா அரசியல் அநாதையாக மாறும். பெரும்பான்மையை வைத்துத்தான் எல்லாம் தீர்மானிக்கப்படும் என்றால், காகத்தைத்தான் தேசியப் பறவை ஆக்க வேண்டும், மயிலை அல்ல என்று அண்ணா அன்றே சொன்னார். இந்த தேர்தல் ஒற்றுமைக்கும், பிரிவினைக்குமான தேர்தல். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Prakash Raj ,Palani ,Marxist Communist Party ,N. Pandy ,DMK ,Secular Progressive Alliance ,Dindigul district ,
× RELATED மக்கள் பயன்பெறும் வகையில் போஜராஜ நகர்...