- ஸ்மிருதி ராணி
- பாஜக
- மாஜி பெண்
- அகிலேஷ்
- புது தில்லி
- Maji
- ஸ்மிருதி ராணி
- அகிலேஷு
- மக்கள் பேரவை
- சமாஜ்வாடி கட்சி
புதுடெல்லி: டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் என்று அகிலேஷூக்கு பாஜக மாஜி எம்பி ஸ்மிருதி ரானி பதிலளித்தார். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து நேற்று மக்களவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது சமாஜ்வாதி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ், பாஜக பெண்களை வெறும் கோஷங்களாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ரானியை மறைமுகமாகச் சாடினார்.
ஸ்மிருதி ரானி முன்பு நடித்த தொலைக்காட்சித் தொடர்களைக் குறிப்பிடும் வகையில், ‘உங்கள் சாஸ்-பாகு (மாமியார்-மருமகள்) தொடரில் நடிகை தோற்றுவிட்டார்’ என்று அகிலேஷ் யாதவ் கிண்டலாகப் பேசினார். அத்துடன், பாஜக ஆளும் 21 மாநிலங்களில் எத்தனை பெண் முதல்வர்கள் இருக்கிறார்கள் என்றும், டெல்லி பெண் முதல்வருக்கு முழு அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த கிண்டலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்மிருதி ரானி நேற்றிரவு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘அகிலேஷ் அவர்களே! மக்களவையில் என்னை பற்றிப் பேசியதாக கேள்விப்பட்டேன். அரசியலைத் சொத்தாகப் பெற்றவர்கள், தங்களின் சொந்த உழைப்பால் உயர்ந்தவர்களைப் பற்றிப் பேசுவது நல்லதுதான். தன் வாழ்நாளில் ஒருமுறை கூட வேலைக்குச் செல்லாதவர்கள், உழைக்கும் பெண்களைப் பற்றி விமர்சிப்பது வேடிக்கையாக இருக்கிறது. உங்கள் கவனத்தை டிவி சீரியல்களில் இருந்து மக்களவை பக்கம் திருப்புங்கள்; பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற உழையுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.
