×

நட்பு நாடுகளின் எரிபொருள் பற்றாக்குறையை ரஷ்யாவால் ஈடு செய்ய முடியும்: சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்த அமைச்சர் லாவ்ரோவ் உறுதி

பீஜிங்: சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் யீயின் அழைப்பின் பேரில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் சீனாவுக்கு நேற்று முன்தினம் சென்றார். இப்பயணத்தின் முக்கிய நிகழ்வாக அவர் நேற்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் சீனா-ரஷ்யா உறவை சீன அதிபர் ஜின்பிங் வெகுவாக புகழ்ந்தார். தற்போதைய சர்வதேச சூழலில் சீனா-ரஷ்யா உறவு விலைமதிப்பற்றது என்றும், இரு நாடுகளின் நியாயமான நலன்களை பாதுகாக்கவும், உலக தெற்கு நாடுகளின் ஒற்றுமையை காக்கவும் சீனாவும் ரஷ்யாவும் தங்களின் நெருக்கமான, வலுவான ஒத்துழைப்பை பயன்படுத்த வேண்டும் என்றும் அதிபர் ஜின்பிங் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ், ‘‘சீனாவிலும், எங்களுடன் சமமான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் அடிப்படையில் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ள பிற நாடுகளிலும் ஏற்பட்டுள்ள எண்ணெய், எரிவாயு பற்றாக்குறையை ரஷ்யாவால் நிச்சயமாக ஈடு செய்ய முடியும்’’ என உறுதி அளித்தார்.

சீன வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் குவோ ஜியாகுன் அளித்த பேட்டியில், ‘‘சீனாவும் ரஷ்யாவும் பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர நலன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எப்போதும் ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகின்றன’’ என்றார்.

ரஷ்ய எண்ணெயை வாங்குவதில் சீனா முதல் நாடாக உள்ளது. உக்ரைன் போருக்குப் பிறகு சீனா-ரஷ்யா இடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஈரான் போர் காரணமாக சீனா, இந்தியா உள்ளிட்ட ரஷ்ய நட்பு நாடுகளின் எரிபொருள் விநியோகம் சீரற்ற முறையில் இருக்கும் நிலையில், ரஷ்யாவின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

* யுரேனியத்தை செறிவூட்ட ஈரானுக்கு உரிமையுண்டு
பீஜிங்கில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் அளித்த பேட்டியில், ‘‘பொதுமக்கள் பயன்பாட்டிற்காக யுரேனியத்தை செறிவூட்டுவதற்கு ஈரானுக்கு தவிர்க்க முடியாத உரிமை உள்ளது. அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தையில் ஈரான் இந்த உரிமையை இடைநிறுத்த முடிவு செய்தாலும், பாதுகாக்க வலியுறுத்தினாலும் எந்தவொரு அணுகுமுறையையும் ரஷ்யா ஏற்கும்.

சர்வதேச சட்டத்திற்கு இணங்க, ஒவ்வொரு தரப்பினரின் நியாயமான உரிமைகளையும் முழுமையாக மதித்து, யதார்த்தமான மற்றும் நியாயமான இலக்குகளை இரு தரப்பினரும் அடையக்கூடிய வகையில், மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை ரஷ்யாவும் சீனாவும் உறுதியாக ஆதரிக்கின்றன.

மேலும் ஈரானில் உள்ள அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பெற்றுக் கொள்ளவும் ரஷ்யா தயாராக உள்ளது. யுரேனியத்தை எரிபொருள் தர யுரேனியமாக மாற்றுவது அல்லது ரஷ்ய சேமிப்பிற்காக மாற்றுவது என எந்த வடிவிலும் இருக்கலாம்’’ என்றார்.

Tags : Russia ,Minister ,Lavrov ,President Jinping ,Beijing ,Foreign Minister ,Sergei Lavrov ,China ,Wang Yi ,President ,Xi Jinping ,
× RELATED கச்சா எண்ணெய் தொடர்பாக இந்தியாவுக்கு...