போர்ட் வொர்த்: பிரபல ஹாலிவுட் நடிகை ஒருவர் தனது மகளுக்கு சிகை அலங்காரம் செய்ததற்கான கட்டணத்தை செலுத்தாமல் ஏமாற்றியதாக பியூட்டிஷியன் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த அழகுகலை நிபுணரான மார்சேயா மெக்கனாலி, போர்ட் வொர்த் பகுதியில் சிகையலங்கார நிலையம் நடத்தி வருகிறார். கடந்த 13ம் தேதியன்று, ‘டீன் மாம்’ புகழ் நடிகை ஃபாராவ் ஆபிரகாம் (34), தனது மகள் சோபியாவின் பள்ளி நடன நிகழ்ச்சிக்கு தயார் செய்வதற்காக மெக்கனாலியின் நிலையத்திற்கு வந்துள்ளார். சுமார் 12 மணி நேரம் நீடித்த இந்த கடினமான பணியில், தலைமுடிக்கு டை அடிப்பது மற்றும் நுணுக்கமான அலங்காரங்கள் செய்யப்பட்டன.
நடிகையின் இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் பக்கங்களில் சிகையலங்கார நிபுணரை விளம்பரப்படுத்துவது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த சேவை வழங்கப்பட்டது. ஆனால், நள்ளிரவில் வேலை முடிந்ததும், நடிகை பணம் ஏதுமின்றி அங்கிருந்து சென்றதோடு, சமூக வலைதளங்களில் அந்த நிபுணரை ‘பிளாக்’ செய்ததாக கூறப்படுகிறது. மேலும், சிகையலங்கார நிபுணரின் பெயரை குறிப்பிடாமல் புகைப்படங்களை நடிகை பதிவிட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து நடிகை ஃபாராவ் ஆபிரகாம் தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். அதில், அந்த ‘சிகையலங்கார நிபுணருக்கு மனநலம் சரியில்லை; அவருக்கு வேலை தெரியவில்லை.
இலவசமாக தலைமுடிக்கு வண்ணம் பூசுவது ஒன்றும் பெரிய காரியம் இல்லை. புகழுக்காக அவர் பிரபலங்களை ஏமாற்றுகிறார்’ என்று அவர் கூறியுள்ளார். இதற்கு பதிலடியாக, நடிகையின் தலைமுடி முன்னதாக எவ்வளவு மோசமாக இருந்தது என்பதற்கான வீடியோ ஆதாரங்களை மெக்கனாலி வெளியிட்டுள்ளார். நடிகை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர நிபுணர் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டில் சுமார் 7.50 லட்சம் டாலர் வாடகை பாக்கி வைத்திருந்ததாக நடிகை மீது வழக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.
