×

சில்லிபாயிண்ட்…

* பேட்மின்டனில் விக்டர் ஓய்வு
புதுடெல்லி: டென்மார்க்கை சேர்ந்த விக்டர் அக்செல்சன் (32), இரு முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டங்களையும், ஒரு முறை உலக சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார். முதுகு வலி பிரச்னையால் கடந்த அக்டோபருக்கு பின் அவர் போட்டிகள் எதிலும் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், பேட்மின்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விக்டர் அக்செல்சன் நேற்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘முதுகுவலி பிரச்னையால் கடந்த ஆண்டு ஏப்ரலில் அறுவை சிகிச்சை செய்த பின்பும் என்னால் முன்பு போல் ஆட முடியவில்லை. எனவே, போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்’ என்றார்.

* சாம்பியன்ஸ் கால்பந்து அரையிறுதியில் மாட்ரிட்
மாட்ரிட்: யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து காலிறுதி 2ம் நிலை போட்டியில் நேற்று அத்லெடிகோ மாட்ரிட் – பார்சிலோனா அணிகள் மோதின. இப்போட்டியில் 4 மற்றும் 24ம் நிமிடங்களில் பார்சிலோனா அணி வீரர்கள் கோல் போட்டனர்.

போட்டியின் 31வது நிமிடத்தில் அத்லெடிகோ மாட்ரிட் அணியின் அடிமோலா லூக்மேன் தனது அணிக்காக முதல் கோல் போட்டார். அதன் பின் கோல் விழாததால், 2-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது. இருப்பினும், இரு காலிறுதி போட்டிகளின் முடிவுகள் அடிப்படையில் 3-2 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடிய மாட்ரிட் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

* ரஹானேவுக்கு ரூ. 12 லட்சம் அபராதம்
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சென்னையில் நடந்த டி20 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 32 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இப்போட்டியில் கொல்கத்தா அணி பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் அந்த அணியின் கேப்டன் அஜிங்கிய ரஹானேவுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஐபிஎல் ஊடக ஆலோசனைக்குழு நேற்று வெளியிட்டது. கொல்கத்தா அணி, ஐபிஎல்லில் இதுவரை 5 போட்டிகள் ஆடி ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chillipoint… ,Victor ,New Delhi ,Viktor Axelsen ,Olympic ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றி..!