×

மார்ச் மாத சிறந்த வீரராக தேர்வு சேட்டனுக்கு ஐசிசி விருது

மும்பை: டி.20 உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடிய சஞ்சு சாம்சன், மார்ச் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசி சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் கிரிக்கெட் வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு, சிறந்த வீரர், வீராங்கனையாக கவுரவிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி மார்ச் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் தேர்வுக்கான பரிந்துரையில், இந்திய வீரர்கள் சஞ்சு சாம்சன், பும்ரா மற்றும் தென் ஆப்ரிக்காவின் கனோர் எஸ்டர்ஹய்ஜென் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இதில், இந்திய வீரர் சஞ்சு சாம்சனை, மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரராக தேர்வு செய்து, ஐசிசி நேற்று அறிவித்தது. கடந்த மாதம் நடந்த டி.20 உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடியதன் காரணமாக, சஞ்சு சாம்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய சஞ்சு சாம்சன், ‘‘ஐசிசி சார்பில் மார்ச் மாதத்தின் சிறந்த வீரர் விருதை வென்றது ஒரு அற்புதமான உணர்வு. குறிப்பாக, எனது கிரிக்கெட் பயணத்தின் மறக்க முடியாத கால கட்டத்தில் இது கிடைத்திருப்பது இன்னும் சிறப்பு. டி.20 உலகக்கோப்பையில் இந்தியாவின் வெற்றியில் ஒரு அங்கமாக இருந்தது உண்மையிலேயே நனவான ஒரு கனவு.

எனக்குக் கிடைத்த வாய்ப்புகளுக்கும், எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த உதவிய எனது சக வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவிற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்,’’ என்று உணர்வுப்பூர்வமாக தெரிவித்துள்ளார். சஞ்சு சாம்சன் ஐசிசி சிறந்த வீரர் என்ற கவுரவத்தைப் பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், மார்ச் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீராங்கனையாக நியூசிலாந்து அணியின் அமெலியா கெர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Tags : ICC ,Chetan ,Mumbai ,Sanju Samson ,T20 World Cup ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு...