×

திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி வகுப்புகள்

திருவள்ளூர், ஏப்.16: திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 2ம் கட்டமாக தேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடந்தன. இதனை, மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்தார். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30ம் தேதி தொடங்கியது. வேட்புமனு மீதான பரிசீலனை, வேட்புமனுவை திரும்ப பெறுவது என அடுத்தடுத்த பணிகள் நடந்தன. வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான காலக்கெடு வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 160 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், மாவட்டம் முழுவதும் 2ம் கட்டமாக தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கவரைப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூரப்பட்டு வேலம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நெற்குன்றம் தனியார் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பட்டாபிராம் டிஆர்பிசிசிசி இந்து கல்லூரி அமைக்கப்பட்டுள்ள பயிற்சி மையங்களில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

வாக்குப்பகுதி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகளை, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பயிற்சி வகுப்புகள் தொடர்பாகவும், தபால் வாக்கு செலுத்துமிடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் மாதிரி வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்து, அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து அறிக்கைகளை வழங்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 10 சட்டமன்ற தொகுதிகளிலும் 19,224 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு முடிவடைந்துள்ளது. மேலும், வரும் 19ம் தேதி 2ம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

நிகழ்வின்போது, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், தனித்துணை ஆட்சியருமான (சபாதி) வெங்கடேசன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சுரேஷ்குமார், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ராஜேஷ்குமார், மாதவரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், வடசென்னை வருவாய் கோட்டாட்சியருமான பெருமாள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாதவரம் வட்டாட்சியருமான அருள்ஜோதி, மதுரவாயல் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மத்திய சென்னை வருவாய் கோட்டாட்சியருமான சதீஷ்குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், மதுரவாயல் வட்டாட்சியருமான ஜெயகுமார், ஆவடி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி துணை ஆணையருமான மாரிசெல்வி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திருநின்றவூர் நகராட்சி ஆணையர் ஜீவிதா, ஆவடி வட்டாட்சியர் கண்ணன், பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

Tags : Tiruvallur district ,Tiruvallur ,District Election Officer ,M. Pratap ,Tamil Nadu Assembly ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் தபால்...