×

20,400 டன் எல்பிஜி-யுடன் குஜராத்தின் காண்ட்லா துறைமுகம் வந்து சேர்ந்துள்ள ‘ஜக் விக்ரம்’ கப்பல்..!

சர்வதேச கடல் வழித்தடத்தில் இந்திய கொடியுடன் பயணிக்கும் ‘ஜக் விக்ரம்’ (Jag Vikram) என்ற எல்.பி.ஜி (LPG) எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல், ஹோர்முஸ் நீரிணையை வெற்றிகரமாக கடந்து இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள காண்ட்லா துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்த கப்பல் சுமார் 20,400 மெட்ரிக் டன் திரவ பெட்ரோலிய எரிவாயுவை (LPG) ஏற்றி வந்துள்ளது. கடந்த ஏப்ரல் 11 அன்று ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்து, ஏப்ரல் 14 அன்று காண்ட்லா துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். செவ்வாய் (நேற்று) இரவு தாமதமாக காண்ட்லா துறைமுகம் வந்த இந்த கப்பல் Oil Jetty No. 1-ல் நங்கூரமிட்டது.

இந்த கப்பலில் உள்ள சரக்குகளை இறக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த சரக்கு இந்தியாவின் எல்பிஜி விநியோகத்தை வலுப்படுத்தும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்டுகிறது. 2 வார தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பிற்கு பின், ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா வந்து சேர்ந்துள்ள முதல் கப்பலாக இது இருக்கிறது. இதனிடையே ஹோர்முஸ் நீரிணையில் சிக்கித் தவிக்கும், இந்திய கொடியுடன் கூடிய 15 கப்பல்களைத் திரும்ப இங்கே கொண்டு வருவதற்காக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகமும் வெளியுறவு அமைச்சகமும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் முகேஷ் மங்கல் பேசுகையில் குறிப்பிட்ட சர்வதேச வழித்தடத்தில் இந்திய கப்பல் போக்குவரத்துச் செயல்பாடுகள் சீராகவே இருந்து வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் இந்திய கோடியை தாங்கி வரும் கப்பல்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்பட்டதாகத் தகவல் ஏதும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஹோர்முஸ் நீரிணையில் இருந்து இந்திய கப்பல்கள் புறப்படுவதற்குச் சாத்திய சூழல் ஏற்பட்ட உடனேயே, அந்த கப்பல்கள் திரும்பி வந்துவிடும் என்று கூறி உள்ளார். இதுவரை 2,177-க்கும் மேற்பட்ட இந்தியக் கடற்பணியாளர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்ப அமைச்சகம் வழிவகை செய்து வருகிறது; இதில் கடந்த 24 மணி நேரத்தில் தாயகம் திரும்பிய 93 கடற்பணியாளர்களும் அடங்குவர். வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் (MEA) ஒருங்கிணைந்து, இந்திய கப்பல்கள் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்வதற்கான முயற்சிகளைத் தங்கள் அமைச்சகம் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். இக்கப்பல்களின் மற்றும் அவற்றில் உள்ள பணியாளர்களின் பாதுகாப்புக்கே தாங்கள் மிக அதிக முன்னுரிமை அளிப்பதாகவும் கூறினார்.

நம் நாட்டின் எல்.பி.ஜி (LPG) தேவையில் சுமார் 90 சதவீதத்தை இந்தியா வளைகுடா நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது. எனவே ஜக் விக்ரம் கப்பலின் வருகையானது விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், உள்நாட்டுச் சந்தையில் எல்.பி.ஜி தடையின்றி கிடைப்பதையும், அதன் விலையில் நிலைத்தன்மையை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kandla port ,Gujarat ,LPG ,Jag ,Strait of Hormuz ,Indian ,
× RELATED ஊழல் செய்வதில் பாஜக, திரிணாமுல்...