புதுடெல்லி: தொகுதி மறுவரையறை என்பது மிகப்பெரிய ஆபத்து என்றும் அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என்றும் ஒன்றிய அரசுக்கு சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்டுவது தொடர்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, ஆங்கில நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார். அதில், ‘ தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் உச்சத்தில் இருக்கும் வேளையில், நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் மூலம் மசோதாக்களை அவசர கதியில் திணித்து நிறைவேற்றுவதற்கு ஒன்றிய அரசு விரும்புகின்றது. இதற்கு ஆதரவு அளிக்கும்படி பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றார். இந்த அசாதாரணமான அவசரத்திற்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்க முடியும்.
அது என்னவென்றால் அரசியல் ஆதாயம் தேடுவதும், எதிர்க்கட்சிகளை நெருக்கடி நிலைக்குத் தள்ளுவதும் தான். வழக்கம்போல் பிரதமர் உண்மையை முழுமையாக வெளிப்படுத்தாமல் மறைத்து வருகின்றார். ஏதோ ஒரு திட்டத்தின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. ஜூலை மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிப்பதில் என்ன தவறு? அவசர அவசரமாக அரசியல் சாசன மாற்றங்களை திணிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. மகளிர் இடஒதுக்கீடு என்பது இங்கு பிரச்னை அல்ல, அது ஏற்கனவே முடிந்துவிட்டது. அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி, ஒன்றிய அரசு கொண்டு வர துடிக்கும் தொகுதி மறுவரையறைதான் மிகப்பெரிய ஆபத்து. இது அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல்’ என்று அந்த கட்டுரையில் சோனியா காந்தி கூறியுள்ளார்.

